ஐசரி கணேஷ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2. நயன்தாரா அம்மனாக நடித்திருக்கும் இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில்
நடந்தது. அதில் பேசிய படத்தின் இயக்குநர் சுந்தர்.சி, கிராபிக்ஸ் காட்சிகள் குறித்த தவறான விமர்சனங்கள் குறித்து தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், “இதுவரை நான் பணியாற்றிய படங்களில் அதிக உழைப்பை வாங்கிய படம் இதுதான். அந்த அளவுக்கு இந்தப் படத்துக்காக உழைத்து இருக்கிறோம்.
பொதுவாக நடிகர்களுக்காக நான் எப்போதும் படம் பண்ணுவது இல்லை. எனக்கு ஒரு ஐடியா வரும். அதனை மெருகேற்றி, அந்தக் கதைக்கு பொருத்தமான நடிகர்களை வைத்து படத்தை எடுப்பேன். அப்படி என்னிடம் ஓர் ஐடியா இருந்தது. அப்போது அது அம்மன் படமாக இல்லை.
ஐசரி கணேஷை
சந்திக்கும்போது, அவர் ‘மூக்குத்தி அம்மன் 2’ பண்ணுகிறீர்களா எனக் கேட்டார். அதுவே ஒரு தெய்வீக சக்தியாகத் தோன்றியது. நான் நினைத்த கதை ‘மூக்குத்தி அம்மன் 2’-க்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது. இப்படிச் சொல்வதால் ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கும் சம்பந்தம் இருக்கும் என நினைக்க வேண்டாம். அது வேறு.இது வேறு.
இந்த இரண்டு படத்துக்கும் நான்கு ஒற்றுமைகள் தான் உள்ளது. அது, படத்தின் தலைப்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நயன்தாரா அப்புறம் ஊர்வசி. இந்தப் படத்தில் நான் மிகவும் விரும்பி ஊர்வசியை நடிக்க வைத்தேன்.
நாங்கள் ஆரம்பிக்கும்போது இந்தப் படம் இவ்வளவு பிரம்மாண்டமாக வரும் என நினைக்கவில்லை. நானும் வெங்கட்டும் மட்டும் இந்தப் படத்துக்காக 2 வருடங்கள் உழைத்திருக்கிறோம். அதுபோக எனது குழு ஒரு 800 பேரின் ஒன்றரை வருட உழைப்பு இப்போது ‘மூக்குத்தி அம்மன் 2’-வாக உங்கள் முன் இருக்கிறது.
இது சாதாரண உழைப்பு இல்லை. ஒவ்வொரு குழுவும், குறிப்பாக கிராபிக்ஸ் குழுவின் சுமார் 400 கலைஞர்கள் ஒன்றரை வருடம் இரவு பகலாக கடுமையாக உழைத்து இதன் காட்சிகளை உருவாக்கி இருக்கிறர்கள்.
ஆனால், யூடியூபில் சிலர் சொல்லி இருக்கும் கருத்து வருத்தம் அளிக்கிறது. விமர்சனங்கள் என்றும் என்னை பாதித்தது இல்லை. ஆனால் உண்மை தெரியாமல் பேசும் விஷயங்கள் வருத்தத்தைத் தருகிறது. அந்தக் காட்சிகள் எல்லாம் ஏஐ என சிலர் சொன்னார்கள். ஏஐ குறித்து நான் குறைவாக மதிப்பிடவில்லை. இனிவரும் காலங்களில் கிராபிக்ஸைத் தாண்டி ஏஐ தான் இருக்கப் போகிறது என்பது தனி விஷயம்.
மூக்குத்தி அம்மனைப் பொறுத்தவரை முழுவதும் தமிழகத்தைச் சேர்ந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் கடும் உழைப்பில் இதன் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கி உள்ளனர். அதைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், தவறாக இருந்தால் தட்டிக்கொடுங்கள், நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.
இந்தப் படத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கிராபிக்ஸ் கட்கள் இருக்கின்றன. அதில் அதிகபட்சமாக 15 காட்சிகளில் தான் ஏஐ பயன்படுத்தி இருக்கிறோம்.
இது ஒரு கதாநாயகியை மையமாகக் கொண்ட படம். கதாநாயகியாக நயன்தாரா, வில்லியாக ரெஜினா நடித்திருக்கிறார்கள். இதன் கதாநாயகர்கள் என்றால் அது படத்தில் பணியாற்றிய 800 பேரும் தான். அந்த அளவுக்கு உழைப்பைக் கொடுத்து இருக்கிறார்கள்” என்றார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து இருக்கிறார். ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம், நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
மூக்குத்தி அம்மன் 2 மகா சக்தியாக உருவாகி பல நன்மைகளை தருவதுடன் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பது படத்தின் முன்னோட்டம் பாடல்களைப் பார்த்த அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர் தீபாவளி அன்று சரவெடியாக வெடிக்கப் போகிறது இந்த மூக்குத்தி அம்மன்2 படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா🙏