🌈 நூறு கோடி வானவில் – திரைப்பட விமர்சனம்

மதிப்பீடு: 4-/5 ⭐

கதைச்சுருக்கம்

ஹரிஷ் கல்யாண், வினோத் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்மாவைக் கொடுமைப்படுத்திய அப்பாவை வெறுத்து, அவரை ஒதுக்கி வாழ்கிறார். மும்பையில் உள்ள ‘சேனல் வுட்’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் வினோத்தை, அவருடைய மேலதிகாரி சுப்ரியா கோவாவுக்குச் செல்லுமாறு உத்தரவிடுகிறார். வேண்டா வெறுப்பாக கோவா செல்கிறார் வினோத்.

அங்கு சாலையில் சித்தியைச் சந்தித்து, அவர் மீது காதலில் விழுகிறார். பின்னர் அந்தக் காதலை விட்டு விலக முடியாமல் தவிக்கிறார். ஆனால், நாயகி பென்னியின் காதலன் ரிச்சி, அவரால் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருக்கிறார். ரிச்சியின் மீது பென்னி உயிரையே வைத்திருக்கிறார்.

இந்நிலையில், வினோத் பென்னியை உயிராகக் காதலிக்கிறார். இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் இடையிலான முக்கோணக் காதல் கதைதான் ‘நூறு கோடி வானவில்’.

‘கல்யாணப் பரிசு’ முதல் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ வரை எத்தனையோ முக்கோணக் காதல் கதைகளைப் பார்த்திருக்கிறோம். அவற்றிலிருந்து சற்று வித்தியாசமான திரைக்கதையுடன் இந்தப் படம் நம்மை ரசிக்க வைக்கிறது.

கோமாவில் இருக்கும் ரிச்சி நலமுடன் திரும்ப வேண்டும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் பென்னி, தான் பணிபுரியும் சேனலில் தொகுப்பாளினியாகச் சித்தியை அறிமுகப்படுத்தி, அதற்காகத் தனது சம்பளத்தையே விட்டுக்கொடுக்கும் வினோத் எனக் கதை சுவாரஸ்யமாக நகர்கிறது.

இந்த மூன்று காதல்களுடன், கோவாவின் அழகு, இளமை ததும்பும் காட்சிகள், இனிய இசை என அனைத்தையும் கலந்து மனதை லயிக்க வைக்கும் ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சசி.

ஹரிஷ், சித்தி இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், புரிதலில் உருவாகும் சிக்கல்கள், எதிர்பார்ப்புகளால் ஏற்படும் மனக்கசப்புகள், காதலுக்காக எடுக்கப்படும் முடிவுகள் ஆகியவைதான் கதையின் முக்கியமான அம்சங்கள்.

இந்தப் படத்தில் நமக்கு மிகவும் சுவாரஸ்யமாகத் தெரிவது ஹரிஷ் கல்யாண் – சித்தி இத்னானி ஜோடியின் காதல் காட்சிகள்தான். இருவரின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

நடிகர் – நடிகைகள்

ஹரிஷ் கல்யாண்

காதல், உணர்ச்சிகள், வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் இளைஞராக நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

காதலி தனக்குக் கிடைப்பாளா என்ற மனக்கொந்தளிப்பைத் தனது சிறந்த நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதிகமான முடியுடன் பார்ப்பதற்கு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

மும்பையிலிருந்து முகம் தெரியாத ஒரு சராசரி மனிதராகக் கோவா வரும் அவர், தனக்குப் பிடித்த பெண்ணுடன் தற்காலிக வாழ்க்கையின் மகிழ்ச்சியை ஆத்மார்த்தமாக அனுபவிக்கிறார். கோவா ஸ்கூட்டர் கேர்ள் பென்னியிடம் மனதைப் பறிகொடுத்து அவஸ்தைப்படும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

தான் காதலிக்கும் சித்திக்கு ரிச்சி என்ற காதலன் இருப்பதையும், அவர் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருப்பதையும் அறிந்து ஹரிஷ் கலங்கும் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன.

ஹரிஷ், சித்தி இருவருக்கும் வாழ்க்கை வெவ்வேறு சவால்களை முன்வைக்கிறது. அந்தச் சூழலில் ஹரிஷ் எடுக்கும் சில முடிவுகள் சுயநலமாகத் தெரிகின்றன.

கோமாவில் இருந்து ரிச்சி மீண்டு வருவதற்கும், தான் உயிராகக் காதலித்த பென்னியுடன் அவரைச் சேர்த்து வைப்பதற்கும் ஹரிஷ் முயற்சி செய்திருந்தால், அவரது கதாபாத்திரம் இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கும்.

சித்தி இத்னானி

பென்னி என்ற கதாபாத்திரத்தில் கதையின் முக்கியமான பாத்திரமாகத் திகழ்கிறார் சித்தி இத்னானி. வினோத்துடனான உறவின் உணர்ச்சிப் பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

தனது காதலன் ரிச்சி நலம் பெற்று வந்துவிடுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் இடங்களில் இவரது கதாபாத்திரம் உயரம் தொடுகிறது.

கதாநாயகி கதாநாயகனைத்தான் காதலிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஹரிஷுடன் இவரை ஜோடியாக்கியிருப்பது அக்மார்க் சினிமாத்தனமாகத் தெரிகிறது.

சித்தி சிறப்பாக நடித்திருக்கிறார். சிரிக்கும்போது தெரியும் அந்தக் கன்னக்குழி அழகியை யாருக்குத்தான் பிடிக்காது! ஹரிஷ் உருகி உருகிக் காதலிப்பதும், குடும்பப் பாங்கான தோற்றமும், லட்சணமான முகமும் கொண்ட சித்தி, பென்னி என்ற கதாபாத்திரத்திற்கு தன்னால் இயன்ற நியாயத்தைச் செய்திருக்கிறார்.

பார்வதி

இந்த இரண்டு பிரதான கதாபாத்திரங்களையும் அநாயாசமாகத் தூக்கிச் சாப்பிட்ட நடிகை யாரென்றால் அது பார்வதிதான்.

சேனலின் கேமரா வுமனாக வரும் அவர், போகிற போக்கில் ஒவ்வொரு வசனத்தின் மூலமும் நம்மைச் சிரிக்க வைத்து கலகலப்பூட்டுகிறார்.

படம் முழுவதும் அவரது நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ரசிக்கும் அளவிற்குச் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.

ரிச்சி – எம். ரினில்

இந்தக் கதாபாத்திரத்தின் மீது வெறுப்பு வரும் அளவிற்கும், அதே நேரத்தில் பரிதாபம் ஏற்படும் வகையிலும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.

சித்தியின் மீது அளவுக்கு மீறிய பாசம் வைக்கும் ரிச்சியின் கதாபாத்திரம் கதையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

கடைசியில் ஹரிஷ், சித்தியைச் சேர்த்து வைக்கப் போகிறார் என்று படம் பார்ப்பவர்கள் நினைக்கும் எதிர்பார்ப்புகளையும் இயக்குநர் சுவாரஸ்யமாகக் கையாள்கிறார்.

மற்ற நடிகர்கள்

கோவை சரளா முக்கியமான துணைக் கதாபாத்திரத்தில் கோவாவில் வாழும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக நடித்துள்ளார். அவர் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலே தனி!

தம்பி ராமையா, மனோகர் என்ற கதாபாத்திரத்தில் கோவாவில் உள்ள ‘சேனல் வுட்’ நிறுவனத்தில் ஹரிஷின் மேலதிகாரியாக வருகிறார். கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும், சின்னி ஜெயந்த் திருநங்கையாக சீதாராமன் என்ற கதாபாத்திரத்தில் வந்து, ஹரிஷை ஒருதலையாகக் காதலிப்பது டோரதி ரகம்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இயக்கம் – சசி

மனித உறவுச் சிக்கல்களின் பல்வேறு பரிமாணங்களைத் திரையில் உலவவிட்ட இயக்குநர்களுள் முக்கியமானவர் சசி.

சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களையும் கலாசாரச் சேதம் பெரிதும் இல்லாத அளவிற்குத் திரைப்படமாக்கியவர். இரண்டு அன்பு உறவுகளுக்கு இடையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஆண், பெண் எனப் பல்வேறு உணர்வுப்பூர்வமான சித்திரங்களைத் தனது படங்களில் அளித்தவர்.

இந்த நோக்கில் இவர் இயக்கிய சில படங்களில் பொதுத்தன்மையைக் காண முடியும்.

இயக்குநர் சசியின் திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தவிர ஏராளமான துணைக் கதாபாத்திரங்களும் இடம்பெறும். அவற்றில் ஒவ்வொன்றுமே பார்வையாளர்களின் மனதில் தங்கும்படியான தனித்துவத்துடன் படைக்கப்பட்டிருக்கும். இதிலும் அப்படியே!

அழகான பென்னி கதாபாத்திரத்தின் மூலம் அழுத்தமான முத்திரை பதிக்கிறார். வினோத் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அன்புக்கு ஏங்கும் ஓர் இளைஞனைப் படைத்துள்ளார்.

இயக்குநரின் ‘பூ’, ‘ரோஜா கூட்டம்’, ‘நூறு சாமி’ படங்களின் வரிசையில் இந்தப் படமும் சேரும்.

இசை – சித்து குமார்

படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் காதல் உணர்வுகளையும் இளமைக்குரிய மனநிலையையும் இசை வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார் சித்து குமார்.

‘கண்ணாட்டி’ பாடல் ரசிக்க வைக்கிறது. பாடல்களை எழுதிய மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணன் ஆகியோரின் வரிகளும் மனதில் நிற்கின்றன.

ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ்.

படத்தின் காட்சிகளை அழகான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதையின் காதல் உணர்வுகளையும் கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் காட்சிகளின் வழியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒளியமைப்பு, காட்சிக் கோணம், வண்ணத் தேர்வு ஆகியவை காதல் திரைப்படத்தின் காட்சியமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, கோவாவின் கடற்கரைகளையும் இயற்கை அழகையும் கேமரா அள்ளி வந்திருக்கிறது.

படத்தொகுப்பு – எம். சுபாரக்

காதல் காட்சிகள், உணர்ச்சிகரமான தருணங்கள், உரையாடல்கள் ஆகியவற்றின் வேகத்தையும் தொடர்ச்சியையும் சீரமைப்பது படத்தொகுப்பின் முக்கியப் பணி.

கதையின் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையின் ஓட்டத்தைப் பராமரிப்பதில் இவரது பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது.

கலை இயக்கம் – இ. தியாகராஜன்

படத்திற்குத் தேவையான அரங்குகள் மற்றும் காட்சிப் பின்னணிகளை உருவாக்கியிருக்கிறார்.

கதாபாத்திரங்கள் வாழும் சூழலையும் கதையின் உலகத்தையும் நம்பகமாகக் காட்டுவது கலை இயக்கத்தின் முக்கிய நோக்கம். இந்தப் படத்தில் இவரது கலை இயக்கம் பாராட்டத்தக்கது.

மக்கள் தொடர்பாளர்கள் – சதீஷ் & சிவா AIM

நிறைவாக…

மொத்தத்தில், காதல் படங்களை விரும்புபவர்களுக்கும், வாழ்க்கையின் எதார்த்தமான உறவுச் சிக்கல்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கும் இந்தப் படம் கவனம் ஈர்க்கக்கூடும்.

பரஸ்பர அன்புடன் வாழும் காதலர்கள் பற்றிய முன்னுதாரணத்தை உணர்த்தியிருக்கிறது. உறவுச் சிக்கல் என்ற பிரச்சினை திரைக்கதையில் திறமையாகப் பயணிக்கிறது. காதலின் புனிதம், நம்பிக்கை, அவசியம் ஆகிய விஷயங்கள் படத்தினுள் விவாதிக்கப்படுகின்றன.

ஹரிஷ், சித்தியின் சிறந்த குணச்சித்திர நடிப்பு, பார்வதியின் குறும்புகள் மற்றும் அமர்க்களமான காமெடி, சின்னி ஜெயந்தின் அலப்பறை, சித்து குமாரின் இனிமையான பாடல்கள், இயக்குநர் சசியின் டிரேட்மார்க் காட்சிகள், உறவுச் சிக்கலைப் பேசிய விதம் எனப் பல காரணங்களால் இந்த வானவில் தனது அர்த்தமுள்ள சுவாரஸ்யத்தை இழக்காமல் இருக்கிறது.

தாமதமாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கும் இந்த வானவில்லின் அழகு ஜாலம் அம்சமாகப் பொருந்தியிருக்கிறது.

தீபாவளியை ZEE5 சின்னத்திரையில் ‘நூறு கோடி வானவில்’ படத்துடன் கொண்டாடுங்கள்! 💥

திரைப்பட மதிப்பீடு: 4-/5 ⭐

Comments (0)
Add Comment