காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு விழா நிகழ்ச்சி
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன், ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்
.இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ்,, ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எஸ். பி. ராஜா சேதுபதி மேற்கொள்ள கலை இயக்கத்தை மகேஷ் நம்பி கவனித்திருக்கிறார். அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம். ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.
வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் சா. காத்தவராயன், கலை இயக்குநர் மகேஷ் நம்பி, நடிகர்கள் அனு மோகன், ரவி மரியா, மதுரை குமார், ஓ எ கே சுந்தர், வையாபுரி, சிசர் மனோகர், சி என் ரங்கநாதன், கஜேஷ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஃபைவ் ஸ்டார் செந்தில், தயாரிப்பாளர்கள் எஸ். கதிரேசன், கே. ராஜன், இயக்குநர்கள் பி. வாசு, கே. பாக்யராஜ் இவர்களுடன் ‘காமெடி கிங்’ கவுண்டமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் காமெடி கிங்’ கவுண்டமணி பேசுகையில், ”அனைவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள். பிறகு நான் என்ன பேசுவது?
தயாரிப்பாளர் ரவி ராஜா இந்த திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜனும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.
இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம். படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்திலுக்கும் நன்றி. இயக்குநர் பி. வாசுவிற்கும் நன்றி. என்னுடைய ரூம் மேட் பாக்யராஜுக்கும் நன்றி. தயாரிப்பாளர் கே .ராஜன் என் நண்பர் தான். அவருக்கும் என் நன்றி.
இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை நன்றாக பாருங்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை திரும்பத் திரும்ப பாருங்கள். நான் திரும்பவும் சொல்கிறேன். ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை பாருங்கள். திரும்பத் திரும்ப சொல்கிறேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். திரும்பிப் பார்த்துவிட்டும் சொல்கிறேன். ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட. இத்துடன் எனது பேச்சை நிறைவு செய்து கொள்கிறேன், வணக்கம், நன்றி,” என்றார்.
விழாவில் கலந்துகொண்டு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் பாடல் ஆசிரியர்கள் அனைவரும் கவுண்டமணி அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பை பாராட்டி பேசினார்கள்
படம் இன்றைய சமகால அரசியல் பேசியிருக்கிறது நையாண்டியும் நக்கலுமாக யோகி பாபு உடன் கவுண்டமணி கலகலப்பாக நடித்திருக்கிறார் பாடல்கள் ரசிக்கும் படி இருந்தது பிரபல காமெடி நடிகர்கள் வளரும் இப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்
மேலும்
நடிகர் கஜேஷ் பேசுகையில், ”என்னுடைய தாத்தா நாகேஷ் உடனும் கவுண்டமணி சார் நடித்திருக்கிறார். என் அப்பா ஆனந்த் பாபுவுடனும் கவுண்டமணி சார் நடித்திருக்கிறார். கவுண்டமணியுடன் நானும் நடித்திருக்கிறேன். தொடர்ந்து மூன்று தலைமுறையாக அவருக்கும் எங்களுக்குமான நட்பும், உறவும் நீடிக்கிறது. படப்பிடிப்பு தளமும், படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களும் முழு மகிழ்ச்சியுடன் இருந்தது,” என்றார்.
நடிகை அபர்ணா பேசுகையில், ”சின்ன வயதில் கவுண்டமணி சாரின் காமெடியை பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் இணைந்து நடிப்பேன் என்று ஒருபோதும் கனவு காணவில்லை. அந்தக் கனவை நனவாக்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஒத்த ஒட்டு முத்தையா’ படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்,” என்றார்.
இசையப்பாளர் சித்தார்த் விபின் பேசுகையில், ”இயக்குநர் என்னிடம் பேசும்போது, ஹீரோ கவுண்டமணி’ என்று சொன்னவுடன் வேறு எதையும் கேட்கவில்லை, நான் பணியாற்றுகிறேன் என்று சம்மதம் தெரிவித்தேன். சந்தானம், யோகி பாபு ஆகியோருடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, ‘கவுண்டமணி தான் எங்களுடைய இன்ஸ்பிரேஷன்’ என சொல்ல கேட்டு இருக்கிறேன். அதனால் கவுண்டமணி தான் ‘பஞ்ச் கிங்’ என்று சொல்வேன். இந்தப் படத்தில் பாடல்களை பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன் ஆகியோர் நன்றாக எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு காமெடி திரைப்படத்தை இயக்குவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். கதாசிரியராக மட்டுமில்லாமல் இந்தப் படத்தை சாய் ராஜகோபால் நன்றாக இயக்கியிருக்கிறார். பொதுவாக மக்களை சிரிக்க வைப்பது என்பது கடினமான காரியம். அதனை இயக்குநர் எளிதாக செய்திருக்கிறார். படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த விழாவிற்கு வருகை இந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.
திரை கதை மன்னர்
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”படத்தின் இசை நன்றாக இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் சித்தார்த்திற்கு நன்றி. கவுண்டமணி நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். மணியைப் பற்றி நிறைய விஷயம் சொல்லலாம். இருந்தாலும் அவரைப் பற்றி மணியான ஒரு விஷயத்தை சொல்கிறேன். இதுவரை மூன்று யுகம் கடந்து விட்டதாக சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை இந்த யுகம் கவுண்டமணி யுகம். சினிமாவில் கவுண்டமணியின் யுகத்தை யாராலும் மறக்க முடியாது, மறுக்க முடியாது. அவர் வாய்ப்புத் தேடும் காலகட்டங்களில் என் அறையில் உள்ள சோதிட புத்தகத்தை எடுத்து காண்பித்து வாசிக்க சொல்வார். அவரைப் பற்றி நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசி ஊக்கமளிப்பேன். அதன் பிறகு எங்கள் இயக்குநரிடம் கடுமையாக போராடி இந்த படத்தில் மணி தான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஒரு நாள் இரவு 12:30 மணிக்குத்தான் எங்கள் இயக்குநர் இவருக்கு ஓகே சொன்னார். அதன் பிறகு எல்டாம்ஸ் சாலையில் உள்ள ஆலயம்மன் கோயில் வாசலில் கற்பூரம் ஏற்றி உங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது என்று சொன்னேன். இந்த நிகழ்வுகள் எல்லாம் இன்றும் என் நினைவில் பசுமையாய் இருக்கிறது.
சுதாகர் நடித்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அவருடைய அறிமுக காட்சியில் வசனங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக யோசித்து, ‘எல்லாருக்கும் நேரம் வரும் தெரிஞ்சுக்கோ.. அது நல்லவருக்கே நிலைச்சிருக்கும் புரிஞ்சுக்கோ.. கல்லாருக்கும் செல்வம் வரும் தெரிஞ்சுக்கோ.. அதை காப்பாற்ற தான் புத்தி இருக்கணும் தெரிஞ்சுக்கோ…’ என எழுதினேன். அது அப்படியே கவுண்டமணிக்கு தான் கச்சிதமாக பொருந்தும். அவர்தான் நல்லவராகவும் இருந்திருக்கிறார். வல்லவராகவும் இருந்திருக்கிறார். கிடைத்த வாய்ப்பை இறுகப் பற்றி புத்திசாலித்தனமாக முன்னேறி இருக்கிறார். கவுண்டமணி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் இன்று என்ன காட்சி, என்ன வசனம், என இதைத்தான் முதலில் பேசுவார். அதன் பிறகு காட்சிகளையும் வசனங்களையும் மேம்படுத்துவதற்காக சிந்தித்துக்கொண்டே இருப்பார். சினிமாவில் லயித்து இருப்பார்கள் என்று சொல்வார்களே, அது கவுண்டமணிக்கு தான் பொருந்தும். அவருடன் நான் அறையில் இருந்தேன் என்பது பெருமிதமாக இருக்கிறது.’ஒத்த ஓட்டு முத்தையா’ என்பது கவுண்டமணியின் பிராண்ட். இந்த படத்தை தொடர்ந்து அவரை வைத்து தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அவர் சினிமா மீது வைத்திருக்கும் மரியாதைக்கும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றியைப் பெறும்,” என்றார்.
ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமையும் கிளாசிக் சினிமா வாழ்த்துகிறது💕
