பத்திரிகையாளர் சந்திப்பில், முன்னணி இயக்குனர்கள் கலந்து கொண்டு பாராட்டினார்கள்*
மற்ற படங்களில் இருந்து விஜய் ஆண்டனி மாறுபட்டு இருக்கிறார் – இயக்குனர் அருண் பிரபு;
துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண் – விஜய் ஆண்டனி பாராட்டு;
மனிதனாக இருப்பது எப்படி என்று விஜய் ஆண்டனி சாரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் – இயக்குனர் விநாயக்;
அடுத்தடுத்து ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் என் வகுப்பு தோழன் ராஜா – இயக்குனர் ஆண்ரோ;
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது,
பாடகி ஷோபா சந்திரசேகர் பேசுகையில்,
விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர். நான் இன்று வேறு ஒரு இடத்தில் இருந்தேன். அவர் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார், உடனே நான் வந்து விட்டேன். முதன் முதலாக சுக்ரன் படத்தில் என்னுடைய கணவர் தான் இவரை அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்போது வேறு பெயரை வைத்துக் கொண்டு வந்தார்.

என்னுடைய கணவர் தான் விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்தார். என் கணவர் ராசியானவர் என்று எல்லோருக்கும் தெரியும். இவரும் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இன்று வரை ராசியாக தானே இருக்கிறார், இவருக்கு என்ன குறைச்சல்? 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி இன்றுவரை 24 படங்கள் முடித்து இது 25வது பட விழாவில் இருக்கிறோம். இசை அமைத்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று நடிக்கும் ஆசை வந்தது. அவர் ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவருடைய முதல் படத்தை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் பார்த்தேன். அவருடைய ஒவ்வொரு படமும் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கும். ஏற்கனவே அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இருப்பினும் இன்னும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
மேலும், இந்த விஜய் சார் பற்றி கூறிவிட்டீர்கள். அந்த விஜய் சார் எப்படி இருக்கிறார்? என்ற கேள்விக்கு ரொம்ப நன்றாக இருக்கிறார் என்று பதில் அளித்தார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில்,
விஜய் ஆண்டனியின் 25 படங்களில் நான் 7 படங்களில் பணியாற்றி இருக்கிறேன் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் பல படங்களில் பயணிப்போம்.
சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ், விஜய் சார் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நிறுவனம் என்று கூறினார். அதுபோல, அவருடைய அப்பா எஸ் சி சந்திரசேகர் சார் அறிமுகப்படுத்திய விஜய் ஆண்டனி சாரும் ஒரு நிறுவனம் தான். இவர் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் சினிமாத்துறை என்பது மிகவும் சவாலாகவும் பிரச்சினையாகவும் இருக்கும் போது அடுத்தடுத்து படங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அனைத்து படங்களும் வெற்றி அடைந்து கொண்டும் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம். அதேபோல் இவர் சோர்வடையாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறார். நாங்கள் சிங்கப்பூர் செல்லும்போது விமானத்தில் நான் தூங்கி விட்டேன். ஆனால், அவர் தூங்காமல் அடுத்தடுத்த பட வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார். அப்துல் கலாம் ஐயா கூறியது போல அவருடைய கனவு அவரை தூங்க விடாமல் செய்கிறது. அவருடைய கனவுகள் 2026 ஆம் ஆண்டு வெற்றிபெறும், அது பற்றி பிறகு பேசுவோம்.
மார்கன் படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. காலையில் எழுந்ததுமே இந்த படத்தை, சென்ற படத்தை விட வியாபார ரீதியாக வெற்றி பெற வைப்பது எப்படி? என்று தான் கேட்பார். நான் கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என்பேன். ஆனால், அக்டோபர் மாதம் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய வேகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
உங்கள் மூலமாக பல தயாரிப்பாளர்கள் உருவாக வேண்டும். அதன் மூலம் பலரும் பயனடைய வேண்டும். இந்த சினிமாத் துறையும் மிகவும் வளர்ச்சி அடைய வேண்டும்.
என்றார்.
நடிகர் / தயாரிப்பாளர் / இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில்,
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இப்போது தான் 25 படங்கள் நடித்தது போல் இல்லை, நேற்று தான் “நான்” படத்தில் நடித்தது போல் உள்ளது.
25 படங்கள் என்பது நான் நாயகனாக நடித்த படங்களை மட்டும் குறிப்பிடவில்லை, நான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படங்களையும் சேர்த்து தான் 25 வது படம் என்று குறிப்பிட்டுள்ளோம்.
அருண் அவர்களின் இயக்கத்தில் நடிப்பேன் என்று தெரியாமலே எனக்கு பிடித்த படம் “அருவி” என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் எனக்கு மெசேஜ் செய்யும் போது நான் நம்பவே இல்லை. அவர் கதை சொல்லும் பொது அவரை மலைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் பாதி சொல்லும் போது இப்படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்று உணர்ந்தேன். நான் எப்போதும் மீடியம் பட்ஜெட் படங்களை தான் நடித்து வந்துள்ளேன். ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியை கேட்டவுடன் பிரமித்துவிட்டேன். ஏனென்றால், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் உள்ளது.

பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்று யோசனை வந்தாலும், இப்படத்தை நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 4 வருடம் எனக்காக காத்திருந்து ஒரு கதை அமைத்ததற்கு பிரபுவிற்கு நன்றி.
இப்படத்தை என் சில நண்பர்களுக்கு காட்டினேன், அவர்களிடம் இவர் மறைமுகமாக ஏதேனும் குறியீடு வைத்திருக்கிறாரா? என்று கேட்டேன். அவர்கள் அப்படி ஒன்றும் இல்லை, நேரடியாகவே சொல்லியிருக்கிறார் என்றார்கள். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், எப்படி இருந்தாலும் இப்படம் ஒரு கலை வடிவத்தில் தானே உள்ளது என்றேன். அந்த அளவிற்கு அழுத்தமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரபு.
பிரபு மற்றும் ஷெல்லியின் காம்பினேஷன் இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து பல படங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேடுகொள்கிறேன்.
நூறு சாமி படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும். அப்படம் பிச்சைக்காரன் படத்தை விட பெரிய ஹிட்டாக இருக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் – ஆக இருந்த இந்த நிறுவனம் 2027 ஆம் ஆண்டு முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற உள்ளது.
அனைவரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சக்தித் திருமகன் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், நன்றி என்றார்.
இயக்குனர் அருண் பிரபு பேசுகையில்,
இங்கு பேசிய அனைவரும் பெரிய வார்த்தைகள் கூறினார்கள், அவர்களுக்கு நன்றி. இப்படத்தை 19ம் தேதி திரையரங்கிற்கு வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
இது மக்கள் சார்ந்த ஒரு அரசியல் படம். நீங்கள் எந்த மாறியான எதிர்பார்ப்பில் வந்தாலும், இப்படம் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்.
விஜய் ஆண்டனி சார் நடித்த மற்ற படங்களை இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மாறுபட்டு இருக்கும்.
நடிகர் அஜய் தீஷன் பேசுகையில்,
சிறு வயதிலிருந்து விஜய் ஆண்டனி சாரை பார்த்து வளரக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அப்படி இருக்க, அவரின் 25 வது படத்தின் மேடையில் நான் நிற்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. பொதுவாக நான் விஜய் ஆண்டனி சார் நடிக்கும் படங்களை பார்த்துவிடுவேன். அதே போல் சக்தித் திருமகன் படத்தை பார்த்துவிட்டு, “என்ன சார் பண்ணிருக்கீங்க” என்று கேட்டேன். அவர் ஒன்றும் புரியாமல் என்னை பார்தார், நான் நன்றாக
உள்ளது என்கிறேனா? இல்லையா? என்று அவருக்கு புரியவில்லை
விஜய் ஆண்டனி மிகவும் சாதுவான ஒருவர், அவர் இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால் அதை என்னால் நம்பவே முடியவில்லை.

அருண் பிரபு சாருக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அருவி படத்தை நான் பள்ளியில் படிக்கும் போது பார்த்தேன், வாழ் படத்தை சென்ற வருடம் பார்த்தேன். இரண்டு படங்களும் என்னை ஏதோ செய்துவிட்டது. அவர் விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்சியாக உள்ளது.
விஜய் ஆண்டனி சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நான் இந்த துறைக்கு புதிது, 5 வருடங்களாக தான் திரைத்துறையில் இருக்கிறேன். சாருடன் இணைந்து பணியாற்றி, உதவி இயக்குனராக பணிபுரிந்து, இப்போது நடிகராகியுள்ளேன்
கதாநாயகி திருப்தி பேசுகையில்,
நான் சென்னை வரும்போது ஒரு வீடு போன்ற உணர்வு கிடைக்கும் இப்போதும் அப்படி தான். சக்தித் திருமகன் என்னுடைய முதல் படம், என்னை நம்பிய விஜய் ஆண்டனி சார் மற்றும் அருண் பிரபு சாருக்கு நன்றி. மருது பாடல் சிறப்பாக வந்துள்ளது, இனி வரும் காலங்களில் மருது பாடல் தான் என்னுடைய ரிங்டோன். இன்னும் பல படங்களில் நடிக்க வாய்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி என்றார்.
நடிகை ரியா பேசுகையில்,
இப்படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இப்படம் வெற்றியடைய வேண்டுமென்று வேண்டுகிறேன் என்றார்.
நடிகை ரினி பேசுகையில்,
நான் இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் நடித்துள்ளேன். தனது 25 வது படத்தில் நடிக்க வாய்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. அருண் சாரின் அருவி படம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க செய்தது. அவரின் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்
இயக்குனர் சசி பேசுகையில்,
சக்தித் திருமகன் படத்தின் மூன்று ட்ரெய்லரில் ஒன்றரை நிமிடம் கழித்து தான் ஹீரோ விஜய் ஆண்டனி வருகிறார். அந்த துணிச்சல் யாருக்கும் எளிதில் வந்துவிடாது, அதுவே இப்படம் வழக்கமான ஒரு பொலிட்டிகள் திரில்லர் படம் இல்லை என்பதை உணர்த்துகிறது.
இப்படத்தின் ட்ரெய்லரை என் மனைவி உடன் பார்த்தேன், அவரின் ரியாக்ஷனை கவனித்தேன் பின்னர் அவர் ட்ரெய்லர் முடிந்தபின் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். நான் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவர் யார் இயக்குனர் என்றார்? நான் அருவி, வாழ் படத்தின் இயக்குனர் அருண் என்றேன். அவர் “அதான்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அங்கு தான் உங்களின் வெற்றி உள்ளது. நீங்கள் நிச்சயம் சாதரண இயக்குனர் இல்லை. நான் இப்படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறேன். ட்ரெய்லரில் கிடைத்த அதே உணர்வு படத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன். இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசும் பொழுது…
நான் இந்த பிரஸ் மீட்டுக்கு போகிறேன் என்று செல்லும் பொழுது
என்ன படம் என்று கேட்டார்கள்
நான் வெற்றி திருமகன் பிரஸ் மீட்க்கு என்று சொன்னேன்
அது சக்தி திருமகன் தானே என்றார்கள்
இல்லை அது வெற்றி திருமகன் விஜய் ஆண்டனி நடித்தாலே அது வெற்றி திருமகன் தான் என்று சொன்னேன்
இப்படம் மாபெரும் வெற்றியடையும் என்றார்.
இப்படம் மாபெரும் வெற்றியடையும் வாழ்த்துகிறது கிளாசிக் சினிமா🙏
