இங்கே வெற்றி பெற்ற இயக்குநர்களின் முதல் படம் அவர்களின் அனுபங்களாகத்தான் இருக்கும். அப்படிபட்ட அனுபவம்தான் சம்யுக்தாவின் நீல நிறச் சூரியன்.
பள்ளி ஆசிரியராய் அறிமுகமாகும் அரவிந்த் பானு டீச்சராய் மாறி மனதுக்குள் உட்காரும் வரை அவள் சந்தித்த போராட்டம், மன ஓட்டம், சமூக பார்வை, காதல், ஆசை என திரைக்கதை நகர்கிறது.
தன்னை பெண்ணாய் அடையாளப்படுத்திக் கொள்ள முடிவு செய்யும் போது… சொல்லால் அடிக்கும் உறவினர்கள்… அவமானத்தில் கூனி குறுகும் அப்பா, கோபப்பட்டாலும் கட்டியணைக்கும் அம்மா, ஆறுதல் சொல்லும் தோழி ஹரிதா, அரவிந்தா இருக்கும் போதும் சரி பானுவாக இருக்கும் போதும் பாலியல் சீண்டல் செய்யும் சக ஆசிரியர்கள், ஆணாகப் பிறக்குறதுதான் நல்லது என தன்நிலையை சொல்லி குமுறும் அக்கா அன்னம். அரவிந்த்துக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்டரின் அணுகுமுறை, மனோதத்துவ டாக்டர் கிட்டியின் அட்வைஸ். (தியேட்டரில் அப்லாஸ் அள்ளுகிறது) என இடைவேளையை நெருங்க அடுத்து என்ன நடக்கும் என கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.
அரவிந்த் வீட்டைவிட்டு ஓடவில்லை. பிச்சை எடுக்கவில்லை. விபசாரம் பண்ணவில்லை. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இல்லை. அருமையான ஆர்கானிக் அப்ரோச் அப்படின்னு சொல்லலாம்.
பெற்றோரிடம் தன் நிலை சொல்லிய பின் அப்பாவி அரவிந்தின் மௌனம் மனதை என்னமோ செய்கிறது. பள்ளியில் தன்னுடன் வேலை செய்யும் சக ஆசிரியைகள் கழிப்பிடத்தை பயன்படுத்தி கொள்ள மறுப்பது மனிதம் மரித்து போனதை சொல்கிறது.
பி.டி. வாத்தியிடம் வரும் காதல் உணர்வு , முதல் சந்திப்பு, அது காமம் சார்ந்த அருவருப்பு என் தெரியவரும் போது இடிந்து போகும் பானுவின் நடிப்பு…அடிபோலி!

பானுவை பள்ளியில் இருந்து விரட்ட நினைக்கும் வி.பி. ஆனால் அரவிந்தின் பாலியல் மாற்றத்தை அவருக்கு சாதகமாக மாற்றி விளம்பரம் தேடிக் கொள்ள நினைக்கும் பள்ளி தாளாளர்.
கெசட்டில் பெயர் மாற்றம் செய்யப் போகும் போது ஆபிஸர் காட்டும் அலட்சியத்தில் மனம் உடைந்து வரும் பானுவிடம் குழந்தையை ஆசிர்வதம் செய்ய சொல்லி கையில் காசை திணிப்பது அவமானத்தின் உச்சம்.
ஊடகங்களிடம் தன்னை அவமானபடுத்திய பள்ளி நிர்வாகி மற்றும் சமூகத்தினரை பெருமையாக கூறும் பானு கழிப்பிடம் சென்று கதறி அழும் அந்த ஒரு இடம் போதும். அரவிந்தாகவும் பானுவாகவும் சம்யுக்தா விஜயன் நீங்க பாஸ் பண்ணிட்டீங்க.
இதுதான் நான் என ஒற்றை மனுசி பானுவின் வலிகள் நிரம்பிய போராட்டம் தான் கதை-வசனம்-இயக்கம், நடிப்பு, இணை தயாரிப்பு என பல அவதாரம். கூடுதல் சிறப்பு தயாரிப்பு மாலா மணியன் அவர்கள். படத்தை அழகாய் நகர்த்தி செல்லும் ஓளிப்பதிவு. வலிக்கும் இதயத்தை வருடும் இசை…
அனைவரும் ஒருமுறையாவது இந்த படத்தைப் பாருங்கள் பாலின மாற்றம் செய்யும் மனிதர்களின் மேல் உள்ள உங்கள் பார்வை மாற்றப்பட வேண்டும்.
இந்த திரைப்படத்தை மக்களிடம் சேர்த்த கேபிள் சங்கர் அவர்களுக்கு நன்றிகள் பல.
பெற்றோர்களே பிள்ளைகளை எந்த காரணத்திற்காகவும் கைவிட்டு விடாதீர்கள். அவர்கள் மனசு என்ன நினைக்கிறதோ அதுவாகவே வாழவிடுங்கள்
