காக்கி சர்க்கஸ் — இணையத் தொடர் விமர்சனம்

கேரள பார்டரை ஒட்டி இருக்கும் அந்த துணைச் சிறைச்சாலையில் கண்காணிப்பாள ராக இருக்கிறார் முனீஷ்காந்த். தனது அதிகாரத்தை வைத்து குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்க அவர் விரும்பவில்லை. மாறாக குற்றவாளிகளை திருத்துவது தான் அவரது தலையாய பணியாக இருக்கிறது.

சிறைச்சாலையில் தண்டனை கைதிகளுக்கு அவர் தரும் அதிகபட்ச தண்டனையே புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்வது தான்.

அதற்காக சிறைக்குள் சிறிய அளவிலான நூலகம் ஒன்றை உருவாக்கி வைத்திருப்பவர், கைதிகளிடம் புத்தகத்தை படிக்க கொடுப்பார். அதில் அனேகம் அவர் எழுதிய புத்தகங்களாக இருக்கும். மோசமான மனநிலை கொண்டவனைக் கூட நல்ல புத்தகங்கள் மாற்றும் என்பது அவரது நம்பிக்கை.

அதே சிறையில் காவலராக பணியாற்றுகிறார் சுபாஷ் செல்வம்.

துடிப்பான இளம் காவலர். அதனாலேயே அதிகப் பிரசங்கி என்ற பட்டத்தை சில சமயங்களில் சுமக்க நேர்கிறது

ஒரு நாள் சோதனையாக சிறைச்சாலையில் இருக்கும் கண்ணகி கோவில் உண்டியலில் இருக்கும் பணம் திருடப்படுகிறது. சிறைச்சாலைக்குள் கோவில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெளியே தெரிவதற்கு முன்பு பணத்தை இருக்கும் இடத்தில் வைத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு காவலர் சுபாஷ் செல்வம் தள்ளப்படுகிறார்.

சிறைச்சாலையில் உள்ள கண்ணகி கோவிலில் போடப்படும் இந்த உண்டியல் பணம் ஆண்டுதோறும் கேரளாவில் உள்ள கண்ணகி கோவில் திருவிழாவின் போது சமர்ப்பிக்கப்படும்.

கண்ணகி கோவில் திருவிழா நடக்க மிகக் குறைவான நாட்களே இருக்கும் நிலையில் அந்த பணம் மீட்கப்பட்டாக வேண்டும். இல்லையேல் திருவிழா நாட்களின் நெருக்கத்தில் உண்மை தெரிந்து காவலர் சுபாஷ் செல்வம் சிக்கிக் கொள்வார்.

இதனால், கண்காணிப்பாளர் முனிஷ்காந்த் ஆலோசனைப்படி வங்கியில் கடன் பெற்று அந்த பணத்தை கோவில் உண்டியலில் போட முடிவு செய்கிறார். அதன்படி கடன் பெற்ற அந்தப் பெரிய தொகையை வீட்டுக்கு எடுத்து வந்த நாளில் அதுவும் திருட்டு போகிறது. இதுவும் அந்த உண்டியல் திருடனின் கைவரிசை தான் என்பது தெரியவர, அதிர்ந்து போகிறார் சுபாஷ் செல்வம். ஒரு வழியாக அந்த திருடன் யார் என்பதை கண்டு பிடித்து விட்டாலும், உரிய ஆதாரங்களுடன் அவனை கைது கைது செய்ய முடிந்ததா? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் கொஞ்சம் சீரியஸ் கொஞ்சம் காமெடி என்ற கோணத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
சிறை கண்காணிப்பாளராக வரும் முனீஷ்காந்த், இந்த படத்தில் முற்றிலும் புதுவிதமாக அறியப்படுகிறார். வழக்கமான தனது உடல் மொழி, காமெடி
பாணியை தவிர்த்து விட்டு மனித நேயம் கலந்த அந்த பாத்திரத்தில் அற்புதமாக வெளிப்படுகிறார். காவலர் சுபாஷ் செல்வம் துறு துறு போலீசாக, திருடனை அடையாளம் கண்டும் பணத்தை மீட்க முடியாமல் உள்ளூற குமுறும் போலீசாக இரு வேறு நிலைகளிலும் தேர்ந்த நடிப்பில் தன் கேரக்டருக்கு உரிய கனம் சேர்த்து விடுகிறார். காதல் காட்சிகளில் மென்மை, சண்டைக் காட்சிகளில் அதிரடி என அந்த ஏரியாக்களிலும் சுலபத்தில் பாஸ் ஆகி விடுகிறார்.

திருடனாக வரும் ராஜேஷ் மாதவன் இன்னொரு அற்புதமான தேர்வு. அந்த ஒல்லி தேகமும் கூர்ந்து நோக்கும் பார்வையும், ரத்தின சுருக்கமாய் நாலே வார்த்தைகளில் போலீசுக்கு சவால் விடும் இடமும் இவரை கமுக்கமான வில்லனாக உணர வைக்கின்றன.

கதாநாயகியாக வரும் வின்சு ரேச்சல் ஷாம் காதல் காட்சிகளில் வெகுவாக சோபிக்கிறார். திருட்டில் கூட்டணி போடும் கேரக்டரில் கெளதமி ஓகே. சவப்பெட்டி செய்யும் கேரக்டரில் அப்துல் லீ பிரமாதப்படுத்துகிறார்.

கொலைக் குற்றவாளியாக சிறைக்கு வரும் இடம் தொடங்கி கிளைமாக்ஸ் வரை சிந்தாமல் சிதறாமல் சிரிப்பையும் தருகிறார்.

சாவித்ரி, அம்ருதா, மருதுபாண்டியன், ராகேஷ், உசர், விக்னேஷ்வர், அருண்குமார் கொடுத்த கேரக்டர்களில் நிறைவு.

ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, இசையமைப்பாளர் சேவியர்- விபின் பாஸ்கர், படத்தொகுப்பாளர் அர்ஜுன் பாபு தங்கள் பணிகள் மூலம் காட்சிகளுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

எடுத்துக்கொண்ட கதையை அதன் இயல்பு மாறாமல் திருப்பங்களுக்கும் பஞ்சமின்றி கதை சொன்ன விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் அமீன் பாரீப்.

கோவில் உண்டியலையும் ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து, அதற்கான பின்னணி கதையோடு ஒவ்வொரு அத்தியாயத்தையும் மிக சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறார்.

திருடன் எதற்காக சிறைச்சாலை உண்டியலில் திருடினான்? என்ற காரணம் வரை சஸ்பென்சுடன் கூடவே சுவாரசியமும் தொற்றிக் கொள்கிறது. சிறைக்குள் கண்ணகி கோவில் ஒரு கதாபாத்திரமாகவே மாறி ரசனை கூட்டுகிறது.

பிளஸ்: இப்படியும் ஒரு வில்லனா என நடிப்பில் ஆச்சரியப்படுத்தும் ராஜேஷ் மாதவன்.

பிளாஷ்: எந்த இடத்திலும் தடம் புரளாத வேகமான திரைக்கதை.

ரேட்டிங்: 6.5/10.