‘தனிநாயகன்’ தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார் குறித்த ஆவணப்படுத்தை இயக்கியிருக்கிறார்.

அவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து….

“தமிழுக்குப் பல்வேறு விதங்களில் தொண்டு செய்த அறிஞர்
தனிநாயகம் அடிகளார்.

தமிழ் என்பது ஒரு மாநில மொழி அல்ல… அது உலகச் சிந்தனை கொண்ட உலகப் பொது மொழி என்பதை உலகுக்கு அறிவித்த பேரறிஞர். அறிவித்ததோடு மட்டுமின்றி அதைச் செயலாக்கம் செய்தவரும் அவர்தான்.

உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் அறிஞர்களைக் கூட்டி உலகத் தமிழ் மன்றம் என்ற ஓர் அமைப்பைஉருவாக்கி உலகத் தமிழ் மாநாடு என்ற கருத்தாக்கத்தை விதைத்து முதல் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் நடத்தியவர். அதைத் தொடர்ந்து தமிழ் ஆய்வுகள் பன்னாட்டு மொழிகளில் நடைபெறக் காரணமானவர்.

உலகமெங்கும் பரவிய தமிழரின் தடங்கள் பல்வேறு நாடுகளில் இருப்பதைக் கண்டறிந்து அதை ஆவணப்படுத்தியவர்.

50-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணம் செய்து தமிழின் பெருமைகளை எல்லா நாடுகளிலும் பரப்பியவர்.

பன்னாட்டு மொழிகளைக் கற்று அம்மொழிகளிலேயே அம்மக்களுக்குத் தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றைக் கொண்டுசென்றவர்.

முதலில் அச்சான தமிழ் நூல்கள் ஐரோப்பிய நூலகங்களில் இருப்பதைக் கண்டறிந்து மீண்டும் அச்சிட்டு அச்சுத் தமிழுக்கு அணி சேர்த்தவர்.
உலகப்_பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தமிழ் இருக்கைகள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.

‘தமிழ் கல்ச்சர்’ எனும் ஆங்கில ஆய்விதழைத் தொடங்கி நடத்தியவர். 200க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் பண்பாட்டுக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு உலகின் கவனத்தைத் தமிழின் மீது திருப்பித் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைக்க உழைத்த அறிஞர்களில் ஒருவர்.

தமிழ் தூது, ஒன்றே உலகம், சங்க இலக்கியத்தில் இயற்கை, பழந்தமிழ் இலக்கியத்தில் கல்வி சிந்தனைகள், திருவள்ளுவர்… முதலிய ஆழமான தமிழ் ஆய்வு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் ஆய்வுக் புலங்களில் ஒப்பிலக்கியத்துறை என்ற ஒன்று உருவாக காரணமான முன்னோடி.

இப்படிப் பன்முகம் கொண்ட பேரறிஞர் தனிநாயகம் அடிகளார்.

தமிழன் மறந்த பெருமைகளில் தனிநாயகமும் ஒன்றாகச் சேர்ந்து விடக்கூடாது என்ற அக்கறையின் காரணமாகத் தமிழ் மரபு அறக்கட்டளை தன்னுடைய வெள்ளிவிழா ஆண்டைத் தனி நாயகம் ஆண்டாகக் கொண்டாட முடிவெடுத்து சென்ற ஆண்டு முழுக்க பள்ளிகள், கல்லூரிகள், இலக்கிய அரங்குகள் பலவற்றில் தனிநாயகரின் பெருமைகளைக் கூட்டங்கள் பல நடத்தி திசையெங்கும் ஒலிக்கச் செய்தது.

அதன் ஒரு பகுதியாகத் தனிநாயகம் அடிகள் குறித்த ஆவணப்படம் ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டு அதை இயக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் க. சுபாஷிணி. பல்வேறு ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுபாஷிணி அவர்களுக்குத் தனிநாயகம் அடிகளார் ஓர் உந்து சக்தி என்பதை அவரோடு உரையாடும்போது உணர்ந்தேன்.

கடந்த ஆண்டு முழுக்கத் தனிநாயகம் அடிகள் பற்றி பல்வேறு நூல்களை படித்து அறிந்து குறிப்பெடுத்து, பல்வேறு அறிஞர்களிடம் நேர்காணல் கண்டு இந்த ஆவணப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர், தமிழறிஞர்கள் எனப் பலர் இந்த ஆவணப்படத்தில் தனி நாயகம் அடிகளார் குறித்த தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

கடந்த 23.08.2026 அன்று சென்னை இணையக் கல்விக் கழகத்தில் நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளை வெள்ளி விழா நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் , வெளியிடத் தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் , மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் மாண்புமிகு குமார் அவர்கள் ஆகியோர் பெற்றுக்கொள்ளத் தனிநாயகன் ஆவணப்பட முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்கள் பேசும்போது தனிநாயகம் அடிகளார் ஆவணப்படத்தை எழுதி இயக்கியதன் மூலம் மகத்தான பணி ஒன்றை செய்திதிருக்கிறார் சகோதரர் பிருந்தா சாரதி. ஒரு தமிழ் மாணவராகத் தன் வாழ்நாள் கடமை ஒன்றை அவர் செய்து முடித்திருக்கிறார்.
இது அவரை உயரத்தில் கொண்டு சென்று அமர்த்தும்,”

என்று பாராட்டியது கடந்த ஓராண்டாக இந்த பணியை ஏற்று செய்ததற்குக் கிடைத்த வெகுமதியாக நினைக்கிறேன்.

மாலை தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர் அவர்கள் ஆவணப்படத்தை முழுமையாக வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார்.

உலகளாவிய சிந்தனை கொண்ட தனிநாயகம் அடிகளார் இப்போது உலக இணையவெளியில் வலம் வருகிறார்.

தனிநாயகன் ஆவணப்படம் யூ ட்யூபில் தற்போது நடிகர் நாசர் அவர்கள் பின்னணிக் குரலில் ஒளிபரப்பாகிறது .

பல அறிஞர்கள் சேர்ந்து பல்லாண்டுகள் ஆற்ற வேண்டிய பணிகளைத் தனி ஒருவராகச் செய்த தனிநாயகம் அடிகளாரை சில மணித்துளிகள் ஒதுக்கி அறிந்து கொள்வோம்.

ஆவணப் படத்தின் நீளம் 40 நிமிடங்கள்.

எழுத்து, இயக்கம்: பிருந்தா சாரதி
கருத்தாக்கம்: முனைவர் க. சுபாஷிணி
பின்னணிக் குரல்: நாசர்
இசை: ஜோகன் சிவனேஷ்
படத்தொகுப்பு: பன்னீர்செல்வம்
ஒலிக்கலவை:ஏ. எஸ். லட்சுமி நாராயணன்