‘ஆல் பாஸ்’ – திரை விமர்சனம்

மதிப்பீடு: 4-/5 ⭐

🎬 ‘ஆல் பாஸ்’ – கதை என்ன?

படத்தின் பின்னணி வடசென்னை. ஆனால் வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் வன்முறை, கேங்ஸ்டர், பழிவாங்குதல் போன்ற வடசென்னை பிம்பத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக, அங்குள்ள சாதாரண மக்களின் குடும்ப வாழ்க்கை, நட்பு, பாசம், சந்தோஷம், சின்னச் சின்ன சண்டைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட குடும்ப உணர்வுக் கதையாக இப்படம் வந்துள்ளது.

வடசென்னையை ரத்தமும் வன்முறையும் இல்லாமல், அங்குள்ள மனிதர்களின் பாசம் மற்றும் குடும்ப வாழ்க்கை வழியாக காட்டும் முயற்சிக்கு இயக்குநருக்கு பாராட்டுக்கள்.

கதையின் மையத்தில் மூன்று குடும்பங்கள் — அழகர், சாந்தி, செல்வம், லட்சுமி, மாணிக்கம், கீதா — இருக்கிறார்கள். இந்த அழகான குடும்பங்களுடன் கதிர், மதன், அருண் என பள்ளிப் படிப்பை முடித்த மூன்று சிறுவர்களும், பிரியா என்ற நாயகியும் இருக்கிறார்கள்.

பொருளாதார சூழ்நிலைகளால் ஒரே வீட்டில் வசிக்கத் தொடங்கும் அவர்கள், காலப்போக்கில் மூன்று குடும்பங்கள் என்ற நிலையைத் தாண்டி ஒரே குடும்பம் போல நெருக்கமாகிறார்கள்.

இன்னொரு புறம் எம்.எல்.ஏ ஆவுடையப்பன், கவுன்சிலர் கர்ணன் ஆகியோருக்கு இடையில் நடக்கும் ஒரு போர்ஷனும் கதையில் இடம்பெறுகிறது.

சத்யா நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்னொரு எபிசோடாக, எம்.எல்.ஏ ஆவுடையப்பன் மகன் பார்த்தி, காதலிக்கும் அஞ்சுவை குணாவை விட்டு கடத்தி சத்யா நகர் குடியிருப்பில் தங்க வைத்து, வெளிநாடு சென்று திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார்.

பார்த்தி, சிறுவர்கள் மூன்று பேரும், முன்னாள் சீனியரான ராமகிருஷ்ணனைப் பார்த்து, அவர் வைத்திருக்கும் கார் மற்றும் சொகுசான வாழ்க்கையைப் பார்த்து, தாங்களும் ஏ.ஆர்.எம் கல்லூரியில் சேர வீட்டில் கேட்கிறார்கள்.

சமையல் வேலை செய்து வரும் அழகரும், பெயிண்டராக வேலை செய்யும் செல்வமும், சைக்கிள் கடை வைத்திருக்கும் மாணிக்கமும் இவர்களது ஆசைக்கு தடை போடுகிறார்கள்.

சிறுவர்கள் மூன்று பேரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது, பந்து ஒரு ஃபேக்டரிக்குள் விழுகிறது. அதை எடுக்கச் செல்லும்போது அங்கு 5 கோடி ரூபாய் பணம் இருப்பதைக் கண்டு, அந்தப் பணத்தை வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள்.

ஆனால் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய சோதனையாக அந்தப் பணம் வருகிறது. அந்தப் பணம் அவர்களுடைய ஒற்றுமையையும் உறவுகளையும் பாதிக்கிறது.

அந்தச் சூழ்நிலையை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களுடைய குடும்பப் பாசமும் நட்பும் அந்தச் சோதனையைத் தாண்டுகிறதா? என்பதுதான் படத்தின் முக்கியமான கதைக்களம்.


⭐ படத்தின் முக்கியமான விசேஷங்கள்

வித்தியாசமான வடசென்னை கதை

வடசென்னை என்றாலே அடிதடி, ரத்தம், பழி, பகை என்ற வழக்கமான சினிமா அணுகுமுறையைத் தவிர்த்து, அங்குள்ள மக்களின் இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்ய முயற்சி செய்திருப்பது இப்படத்தின் முக்கிய சிறப்பு.

மூன்று குடும்பங்களின் வாழ்க்கை

ஒரு சமையல்காரர், ஒரு பெயிண்டர், ஒரு சைக்கிள் கடைக்காரர் போன்ற சாதாரண தொழில் செய்யும் மனிதர்களின் குடும்பங்களைச் சுற்றி கதை நகர்வதால் மனதுக்குள் ஒரு நம்பகத்தன்மை ஏற்படுகிறது.

நமது பக்கத்து வீட்டில் நடக்கும் கதைக்களம் போல இயல்பாக இருக்கிறது.


🎭 நடிகர் & நடிகைகள்

துஷ்யந்த் – ஜனனி கூட்டணி

‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. ஒரு மெலோடி பாடலுக்கு ஜோடியாக டூயட் பாடி ரசிக்க வைக்கிறார்கள்.

துஷ்யந்த் கதாபாத்திரம் நேர்மையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நன்றாக நடித்திருக்கிறார்.

பிரசன்னா பாலசந்திரன் – மோகனா

மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் பிரசன்னா பாலசந்திரனும், கீதா என்ற வேடத்தில் மோகனாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷ் – செந்தில்குமாரி

அனுபவம் வாய்ந்த நடிகர்களான ஜெயபிரகாஷ், செந்தில்குமாரி இருவரும் அழகர் – சாந்தி என்ற கணவன், மனைவியாக நடித்திருக்கிறார்கள்.

வடசென்னை மக்களின் அன்புக்குரிய கதாபாத்திரமாக இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷ் பணத்தைக் கண்டு மயங்காதவராக, “5 கோடி பணம் கிடைக்கிறது; அதை நாம் எடுத்துவிட்டால், அதற்குப் பின்னால் பெரிய ஆபத்து வரும்” என்று உணர்ந்து, தன்னுடைய கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்.

இவரை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.

செந்தில்குமாரியும் பொறுப்பான குடும்பத் தலைவியாக நடித்திருக்கிறார்.

சுப்பிரமணிய சிவா – வினோதினி

செல்வம், லட்சுமி என்ற தம்பதியர்களாக சுப்பிரமணிய சிவா மற்றும் வினோதினி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சரத் லோகித்ஷவா

எதிர்மறை கதாபாத்திரத்தில் எம்.எல்.ஏ ஆவுடையப்பன் வேடத்தில் சரத் லோகித்ஷவா மிரட்டி இருக்கிறார்.

சத்யா

கவுன்சிலர் கர்ணா வேடத்தில் சத்யா வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன.

அதுவும் அவரது மனைவி “அம்மா வீட்டுக்குப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு அவர் நடத்தும் காரியம் தியேட்டரில் குபீர் சிரிப்பை ஏற்படுத்துகிறது.

சஞ்சய் – கோகுல் – நிகில்

கதிர் என்ற வேடத்தில் சஞ்சய், அருண் என்ற கதாபாத்திரத்தில் கோகுல், மதன் என்ற கதாபாத்திரத்தில் நிகில் ஆகிய மூவரும் படத்தின் மையமாகத் திகழ்கிறார்கள்.

இவர்கள் கொண்டுவரும் பணம்தான் படத்தின் கதைக்களத்தில் முக்கிய அம்சமாக இருக்கிறது.

மூவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ‘ஆல் பாஸ்’ பாடலுக்கு நடனமும் சிறப்பாக ஆடி இருக்கிறார்கள்.

வடசென்னையில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் இளைஞர்களின் கனவை இவர்களின் கண்களில் பிரதிபலித்திருக்கிறார்கள்.

ரோஷன் பஷீர்

பார்த்திபன் என்ற வேடத்தில் எம்.எல்.ஏ ஆவுடையப்பனின் மகனாக வந்து, அஞ்சுவைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அருவி மதன்

இன்ஸ்பெக்டர் வேலுவாக சில காட்சிகளில் வந்தாலும், இவரது நடிப்பு நிறைவாக இருக்கிறது.

இயக்குநர் மூர்த்தி

லோகு என்ற கதாபாத்திரத்தில், அவுட்டர் செல்வத்துடன் பெயிண்டிங் வேலை செய்யும் குடியும் கும்மாளமுமாக வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

கலையரசன் கண்ணுசாமி

கோபால் என்ற கதாபாத்திரத்தில் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

இப்படி இந்தப் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கதாபாத்திரத் தேர்வும், நடித்த நடிகர்கள் அனைவரின் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்கு உதவுகின்றன.


🎥 தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஒளிப்பதிவு

‘கலகத் தலைவன்’, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் தில்ராஜு இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். காட்சிகளை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசை

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘ஆல் பாஸ்’ பாடலும், டூயட் பாடலான மெலோடியும், பிரிந்தவர்கள் ஒன்று சேரும்போது வரும் ‘மெல்ல மெல்ல’ என்ற பாடலும் ரசிக்க வைக்கின்றன.

இனிமையான இசையும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

பாடல்களை மோகன் ராஜன், நிலவை பார்த்திபன், ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

பாடல் வரிகள் படத்திற்கு மட்டுமல்ல, படம் பார்ப்பவர்களுக்கும் சுகமான நினைவுகளைத் தந்து விட்டுப் போகின்றன.

படத்தொகுப்பு

‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ். பாஸ்கர் இந்தப் படத்திற்கும் எடிட்டிங் செய்துள்ளார்.

படத்தொகுப்பு சிறப்பாக இருக்கிறது. இரண்டு மணி நேரம் வரை இடைவேளைக்கு முன்பாக ஜாலியாகவும், கலகலப்பாகவும் செல்கிறது.

இடைவேளைக்குப் பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் படத்தொகுப்பாளர் செதுக்கியிருக்கிறார்.

கலை இயக்கம்

கலை இயக்குநராக ஜெயசீலன். T பணியாற்றியுள்ளார்.

5 கோடி ரூபாய் பணக்கட்டுகள் மற்றும் சத்யா நகர் வீடுகள் என அனைத்தையும் இயல்பாக வடிவமைத்திருக்கிறார்.

நடனம்

பிரபல நடன இயக்குநர் I. ராதிகா நடனம் அமைத்துள்ளார்.

‘ஆல் பாஸ்’ நடனத்திற்கு செம குத்தாட்டம் போட பயிற்சி கொடுத்திருக்கிறார்.

சண்டைக் காட்சிகள்

சண்டைக் காட்சிகளை மெட்ரோ மகேஷ் மேற்கொண்டுள்ளார்.

ஒப்பனை: எல்.வி. ராஜா
உடைகள்: ஏ.எஸ். வாசன்
ஸ்டில்ஸ்: அண்ணாதுரை
விளம்பர வடிவமைப்பு: கிப்சன் UGA
மக்கள் தொடர்பு: புவன் செல்வராஜ்
தயாரிப்பு: மோகனா. ஆர்.


🎬 இயக்குநர் மைதீனின் நோக்கம்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மைதீன்.

வடசென்னை மக்களை வேறொரு கோணத்தில் காட்ட வேண்டும் என்பதே படத்தின் முக்கிய நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறது.

படம் பார்ப்பதற்கு அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. காட்சிகளை உணர்ந்து படமாக்கி இருக்கிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாகவும் வாழ்க்கையில் அன்பு, நேசம், மனிதம் ஆகியவைதான் என்றும் நம்மோடு வாழும் என்பதை உணரச் செய்திருக்கிறார்.

ஜெயபிரகாஷ் கதாபாத்திரத்தின் மூலம் இங்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்ற சமூக நற்சிந்தனையை விதைத்திருக்கிறார்.

பேராசை பிடித்த மனைவிகள்தான் நிம்மதியான வாழ்க்கைக்கு வில்லங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

பொருளாதார சூழ்நிலையில் வாழ்ந்து வரும் இளைஞர்கள், தங்கள் அப்பா, அம்மாவின் பொருளாதார நிலைக்கு ஏற்ற மாதிரி கல்விச் சாலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சமூகக் கருத்தையும் சொல்லி இருக்கிறார்.

ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் பணம் வந்தவுடன் எப்படி மாறிப் போகிறார்கள் என்பதையும், “இவர்கள்தான் மனிதர்கள்” என்ற உண்மையையும் போட்டு உடைத்திருக்கிறார்.

அதனால் இது ‘வடசென்னை வாழ்க்கை + குடும்ப உணர்வு’ என்ற கோணத்தில் இயக்குநர் இயக்கியிருக்கிறார்.

வெட்டுக்குத்து, ரத்தம் என்று இல்லாமல் அன்பு, பந்தம், பாசம், நட்பு என்று இயக்குநர் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது. இயக்குநருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.


🎯 தலைப்பின் அர்த்தமே கதையுடன் தொடர்புடையது

‘All Pass’ என்ற பெயர் வெறுமனே ஒரு கவர்ச்சியான தலைப்பு அல்ல.

படத்தில் வரும் குடும்பங்கள் சந்திக்கும் வாழ்க்கைச் சோதனையில் அவர்கள் ‘Pass’ ஆகிறார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் மையக் கருத்து.


🎞️ தயாரிப்பு

மோகனா. ஆர் – One Step Entertainment சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

அத்துடன் கீதா என்ற அருமையான வேடத்திலும் நடித்திருக்கிறார்.

தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்.

நல்ல குடும்பத் தலைவியாகவும், பணம் வந்த பிறகு மாறிப்போகும் சராசரி பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் அற்புதமாக நடித்திருக்கிறார்.


📍 45 நாட்கள் வடசென்னையிலேயே படப்பிடிப்பு!

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வடசென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலேயே நடைபெற்றுள்ளது.

இயக்குநர் மைதீன் வடசென்னையின் இயல்பான வாழ்க்கையைப் பதிவு செய்வதற்காக அப்பகுதியிலேயே நீண்ட நாட்கள் படப்பிடிப்பை நடத்தியிருப்பது படத்தின் இயல்புத்தன்மைக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.


💐 மொத்தத்தில்…

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல குடும்பப் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

தவறான வழியில் வரும் பணம் பெரிய ஆபத்தையும் கொண்டுவரும். எனவே, உழைப்பில் வராத பணத்தின் மீது ஆசை வைப்பதற்குப் பதிலாக, உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தோடு நிம்மதியாக வாழலாம்.

அன்போடு வாழலாம்.

நண்பர்கள் பிரியாமல் இருப்பது, ஒற்றுமையின் பலம் என்று உரக்கச் சொல்லி இருக்கும் இயக்குநருக்கு ஒரு பெரிய பூங்கொத்து. 💐

மதிப்பீடு: ⭐ 4-/5

‘ஆல் பாஸ்’ – வடசென்னை வாழ்க்கையை வன்முறையின்றி, மனிதர்களின் அன்பும் பாசமும் வழியாகப் பேசும் ஒரு குடும்ப உணர்வுப் படம்.