பனி விழும் இரவு – திரை விமர்சனம்

மதிப்பீடு: 4-/5

இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையும் சமூக வலைதளங்களும்!

சமூக வலைதளங்கள், காதல், மனிதர்களுக்கிடையேயான நம்பிக்கை, உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகியுள்ளது “பனி விழும் இரவு.”

ஒரே இரவில் அடுத்தடுத்து நிகழும் பதற்றமான சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன.

கதைச் சுருக்கம்

சென்னையிலிருந்து கொடைக்கானலுக்குப் போட்டோ ஷூட் நடத்துவதற்காக வருகிறார்கள், திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருக்கும் ஜே.கே.வும் ஷபியும். அவர்கள் தங்கும் பெரிய பங்களாவில் வாட்ச்மேன் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.

அந்த பங்களாவில் இருக்கும் ஒரு பொம்மை அடிக்கடி ஜே.கே.வைப் பார்த்துப் பயமுறுத்துகிறது. அந்தப் பொம்மைக்கும் நாயகனுக்கும் என்ன சம்பந்தம்? அந்த வீட்டுக்குள் வேறு நபர்கள் இருக்கிறார்களா என்று ஜே.கே. சந்தேகப்படுகிறார். உண்மையில் அங்கு வேறு யாராவது இருக்கிறார்களா?

போட்டோ ஷூட் நடத்துவதற்காகக் கார் ஓட்டுநர் சுருளியையும் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். அதன் பிறகு நாயகி ஷபி காணாமல் போகிறார்.

ஷபியைக் கடத்திச் சென்றது யார்? டயானா பேலஸுக்குள் ஒரு பெண் ஆவி இருப்பதாகக் கூறப்படுகிறதே, அந்த ஆவி யார்? காவல்துறை அதிகாரியின் விசாரணையில் நாயகன் சொல்வது உண்மையா? வாட்ச்மேன் சொல்வது உண்மையா? உண்மையில் நடந்தது என்ன?

கொடைக்கானலுக்கு இரவில் ஒரு முகமும், பகலில் ஒரு முகமும் உண்டு. அப்படியென்றால், அந்த இரவில் என்ன நடந்தது?

“அடுத்து என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் விறுவிறுப்பாக நகர்கிறது “பனி விழும் இரவு.” இதை ஒரு திகிலான இரவு என்றே சொல்லலாம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரை கதையின் முடிவை எளிதில் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர், நடிகைகள் – நடிப்பும் பங்களிப்பும்

அருண் கார்த்தி – ஜே.கே.

ஜே.கே. என்ற கதாபாத்திரத்தில் அருண் கார்த்தி நடித்துள்ளார். காதல் காட்சிகளிலும், குழப்பமான சூழ்நிலைகளிலும், காதலி காணாமல் போனதால் தவிக்கும் தருணங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

எனாக்க்ஷி கங்குலி – ஷபி

ஷபி என்ற கதாபாத்திரத்தில் எனாக்க்ஷி கங்குலி நடித்துள்ளார். “வசீகரா” பாடலைப் பாடியபடி காரில் பயணிப்பது, காதலனுடன் போட்டோ ஷூட்டில் பங்கேற்பது என ஒவ்வொரு காட்சியிலும் தனது இருப்பைப் பதிய வைக்கிறார். அழகான வரவு!

கருப்பு நம்பியார் – நாகராஜ்

ஏட்டு நாகராஜ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கருப்பு நம்பியார், கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். டயானா பேலஸுக்குள் சென்று புலன்விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறியும் கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார்.

சேரன் ராஜ் – மதிமாறன்

கொடைக்கானல் காவல்துறை அதிகாரி மதிமாறன் கதாபாத்திரத்தில் சேரன் ராஜ் கம்பீரமாக நடித்துள்ளார். அவர் விசாரணை நடத்தும் விதமும், வெளிப்படுத்தும் கம்பீரமும் தனித்துவமாக இருக்கின்றன.

சரவணசக்தி – வாட்ச்மேன்

டயானா பேலஸுக்குள் தனி ஆளாக வசிக்கும் வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் சரவணசக்தியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

கஜராஜ் – டாக்டர் சரவணன்

மனநல மருத்துவர் டாக்டர் சரவணன் கதாபாத்திரத்தில் கஜராஜ் நடித்துள்ளார். கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் இந்த வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

சுருளி, உமர் (பால்காரன்), வினோத், செ. ரா. ராஜேஷ் (சோலை ராஜ்) ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு

ஒளிப்பதிவு – ஜெயக்குமார் தங்கவேல்

“அரண்டவனுக்கு இரண்டதெல்லாம் பேய்”, “கலன்”, “நாதுராம் கோட்சே”, “போலீஸ் ஃபேமிலி”, “ஆட்ரிக்கா” (மலையாளம்) போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொடைக்கானலின் இயற்கை அழகையும், இரவு நேரத்தின் திகிலையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். மலைப்பகுதிகளின் அழகான வளைவுகள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

இசை – சதாமுருகன்

“சாதுவன்” படத்தின் இசையமைப்பாளர் சதாமுருகன், இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். பின்னணி இசை திகில் காட்சிகளுக்கு வலுசேர்த்து மிரட்டுகிறது. சதாமுருகன் மற்றும் சந்தோஷ் ஆறுமுகம் எழுதிய பாடல்களில் மெலோடி பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

படத்தொகுப்பு – எம். எஸ். செல்வா மற்றும் சி. ஆர். புவனேஷ்

“அரண்டவனுக்கு இரண்டதெல்லாம் பேய்”, “கிளாஸ்மேட்ஸ்”, “போலீஸ் ஃபேமிலி” உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய எம். எஸ். செல்வாவும், “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”, “இருமுனை”, “அந்தாதி”, “பகையறு”, “இன்ஸ்பெக்டர் சூரியா” உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சி. ஆர். புவனேஷும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடங்கள் ஓடும் படத்தை விறுவிறுப்பாகத் தொகுத்திருப்பது படத்தின் பலம்.

மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள்

  • டிசைனர்: விட்டல் ரமணன்
  • மக்கள் தொடர்பு: சரண்
  • தயாரிப்பு: சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா
  • கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: செ. ரா. ராஜேஷ்

இயக்குநரின் கைவண்ணம்

செ. ரா. ராஜேஷ் எழுதி இயக்கியுள்ள இப்படம், முதல் பாதியில் கமர்ஷியல் அம்சங்களுடன் நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு கதையில் உள்ள பல முடிச்சுகளைச் சிக்கலின்றி அவிழ்த்து, அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதையை நகர்த்தியுள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த இன்றைய காலகட்டத்தில், மனிதர்களின் வாழ்க்கையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் உணர்த்தும் வகையில் கதையை இயக்கியுள்ளார்.

தெளிவான திரைக்கதை, வசனம், விறுவிறுப்பான காட்சியமைப்பு என வித்தியாசமான முறையில் படத்தை வழங்கியிருக்கும் இயக்குநருக்குப் பாராட்டுகள்!

இறுதியாக…

திகில், மர்மம், காதல், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் எனப் பல அம்சங்களை இணைத்து, கிளைமாக்ஸ் வரை அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தக்கவைக்கும் படமாக “பனி விழும் இரவு” அமைந்துள்ளது.

மதிப்பீடு: 4-/5