# சட்டமும் நீதியும் 2 – திரை விமர்சனம்

**மதிப்பீடு: 4-/5**

முதல் சீசனில் ஒரு சாதாரணத் தந்தையின் துயரத்திலிருந்து சமூக நீதிக்கான போராட்டம் உருவானது. இரண்டாவது சீசனில் உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி களமிறங்குவது கதைக்கு வலு சேர்க்கிறது. அதற்கு ஏற்ற திரைக்கதையும், விறுவிறுப்பான நீதிமன்றக் காட்சிகளும் அசத்தல். நீதிமன்றத் திரில்லர் ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய புதிய தொடராக வந்திருக்கிறது ‘சட்டமும் நீதியும் 2’.

தயாரிப்பாளர் சத்யகலா பிரபாகரனுக்கு மீண்டும் ஒரு வெற்றித் தொடராக இது அமைந்துள்ளது.

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் நடிகர்கள் சரவணனும் வரலட்சுமியும். சட்டம், அதிகாரம், உண்மை ஆகியவற்றைச் சுற்றியுள்ள மோதல்களுக்கு இவர்களது நடிப்பு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது.

“நீதி எல்லா உயிர்களுக்குமானது. நீதியை நிலைநாட்டும் கருவியான சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கருத்தை இத்தொடர் ஓங்கி ஒலிக்கிறது.

## கதை களம்

இன்ஸ்பெக்டர் ஜெகன் (பவன்), தனது சொந்த ஊரான சோழவரம் காவல் நிலையத்துக்குப் பணியிட மாற்றம் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆவடி காவல் நிலையத்தில் பணியாற்றும் பதினைந்து பேரை அழைத்துப் பார்ட்டி வைக்கிறார்.

அப்போது இன்ஸ்பெக்டர் கனகவேல் உள்ளிட்ட ஐந்து போலீஸார், ஆந்திராவிலிருந்து வந்த குற்றவாளி ஒருவரைத் தப்பிக்கவிட்டு, ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வருகிறது. அதில் கனகவேல் நான்கு லட்சம் ரூபாயைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, மீதமுள்ள நான்கு பேருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயைப் பிரித்துக் கொடுக்கிறார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க ஜெகன் ஐந்து பேரையும் அழைக்கிறார். அங்கு கனகவேல், முருகானந்தம், குமார், இப்ராகிம், சங்கர் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டு கனகவேல் உயிரிழக்கிறார்.

கனகவேல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது மனைவியும் வழக்கறிஞருமான சாந்தா (வரலட்சுமி), தனது கணவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறி நீதிக்காகப் போராடுகிறார்.

பார் கவுன்சில் தலைவராக இருக்கும் சாந்தா, கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு போலீஸாருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையே சிக்கலான சூழல் உருவாகும் நிலையில், வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியை அணுகுகிறார்.

வழக்குகள் ஏதுமின்றி, தொழில்ரீதியாகத் தோல்வியடைந்து அவமானத்தின் உச்சத்தில் இருக்கும் சுந்தரமூர்த்தி, இந்த வழக்கை ஏற்க ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு நடைபெறும் சட்டப் போராட்டமே இத்தொடரின் மையக்கதை.

தோல்வியடைந்த வழக்கறிஞரின் வாழ்க்கை, புதிய வழக்கறிஞரின் போராட்டம், வழக்கில் சிக்கிய போலீஸாரின் குடும்பச் சூழல் எனப் பல்வேறு கோணங்களில் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

## சரவணன்

முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரவணன், சுந்தரமூர்த்தியாகவே வாழ்ந்திருக்கிறார். சட்டத்தின் மீதும் நீதியின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கும் அந்தக் கதாபாத்திரம், வாழ்க்கையை யதார்த்தமாக அணுகும் விதம் அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

நியாயம் கேட்டு களமிறங்கும் சுந்தரமூர்த்தி, ஒருகாலத்தில் வழக்குகள் இல்லாமல் அவமானத்தின் உச்சத்துக்குச் சென்றவர். திருமணத்துக்குத் தயாராக இருக்கும் தனது மகளுக்காக 40 சவரன் நகை சேர்க்க வேண்டும்; குடும்பத்தை நடத்தப் பணம் சம்பாதிக்க வேண்டும்; மனைவியின் ஏளனப் பேச்சுகளுக்குப் பதிலளிக்க வேண்டும்; தனது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும் எனப் பல நெருக்கடிகளுக்கு இடையே வாழ்கிறார்.

இத்தனை உணர்வுகளையும் சுந்தரமூர்த்தியின் கதாபாத்திரத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சரவணன். தனது அனுபவம் வாய்ந்த, முதிர்ச்சியான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு ஆழம் சேர்த்திருக்கிறார்.

ஒருசில இடங்களில் காட்சிகளின் போக்கில் அவர் வெளிப்படுத்தும் நையாண்டிகளும் ரசிக்க வைக்கின்றன. முதன்மைக் கதாபாத்திரம் என்ற பொறுப்பை உணர்ந்து, ஒட்டுமொத்தத் தொடரையும் தனது நடிப்பால் தாங்கிப் பிடித்திருப்பது பாராட்டுக்குரியது.

கிளைமாக்ஸ் காட்சியில், “சட்டத்தின் முன் நாம் வெற்றி பெற்றாலும், நீதியின் முன் தோல்வியடைந்துவிட்டோம்” என்ற குற்றவுணர்வில் கதாபாத்திரங்கள் புலம்புவதும், குமாரிடம் “நீ செய்தது தவறு!” என்று வாதிடுவதும் சரவணனின் அனுபவமிக்க நடிப்புக்குச் சான்றாக அமைகின்றன.

அவருக்குத் தக்க உறுதுணையாக வரும் நடிகை லாவண்யாவும் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்.

## வரலட்சுமி

சாந்தா என்ற பார் கவுன்சில் தலைவராகவும் வழக்கறிஞராகவும் வரும் வரலட்சுமி, தனது மிடுக்கான நடிப்பால் நம்மைக் கவர்கிறார்.

தனது கணவரின் மரணத்துக்கு அந்த நான்கு போலீஸாருமே பொறுப்பு என்று நீதிமன்றத்தில் வாதாடும் இடங்களிலும், கணவரிடம் வாடகைத்தாயாக மாறலாம் என்று கூறும் காட்சியிலும், அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கும் தருணத்திலும் வரலட்சுமியின் நடிப்பு மிளிர்கிறது.

‘விதி’ படத்தில் சுஜாதா சீற்றத்துடன் நடித்த நீதிமன்றக் காட்சிகளை நினைவூட்டும் வகையில், இந்தத் தொடரில் வரலட்சுமி சிறப்பாக நடித்திருக்கிறார். பாராட்டுகள்!

## மற்ற நடிகர்கள்

முருகானந்தமாக வரும் கவிதா பாரதி தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டியிருக்கிறார். இப்ராகிமாக வரும் ஆறு பாலாவின் நடிப்பும் நன்றாக இருக்கிறது.

கல்லூரி வினோத் குமார், பீட்டர், சந்திரன் சிவன், சாம்பர்யா, பவன், அட்சயா, பிரியங்கா, ரோபோ சங்கர், அபர்ணா சுந்தர்ராமன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்களது நடிப்பிலும் பெரிய குறைகள் இல்லை. இவர்களைக் கடந்து, தொடரில் நடித்திருக்கும் பல புதுமுக நடிகர்களும் தங்களது பங்களிப்பால் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

## ஒளிப்பதிவு

ஒளிப்பதிவாளர் கோகுல கிருஷ்ணன், நீதிமன்றக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு காட்சிகளைச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார். சுந்தரமூர்த்தியுடன் நாமும் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில், காட்சிகளை ஆர்வத்துடனும் துடிப்புடனும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

## படத்தொகுப்பு

படத்தொகுப்பாளர் ஆதீஸ்வரன், ஒவ்வொரு எபிசோடையும் தேவைக்கேற்பச் சுருக்கமாகத் தொகுத்திருக்கிறார். நேர்கோட்டில் அல்லாத கதை வடிவத்தையும் தெளிவாக அடுக்கடுக்காக இணைத்து, கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.

## இசை

இசையமைப்பாளர் விபின் பாஸ்கரின் இசை தொடருக்குப் பெரும் பலம் சேர்க்கிறது. நீதிமன்ற விசாரணைகள், காவல்துறையினருடனான மோதல்கள், தோல்வியடைந்த வழக்கறிஞரின் அன்றாட வாழ்க்கை எனப் பல்வேறு சூழல்களுக்கு அவரது பின்னணி இசை வலு சேர்க்கிறது.

நெருக்கடியான தருணங்களுக்கு ஏற்ற பின்னணி இசையுடன், டைட்டில் டிராக்கும் கிளைமாக்ஸில் இடம்பெறும் உணர்ச்சிகரமான பாடலும் கவனத்தை ஈர்க்கின்றன.

## வசனம்

இதுவரை திரையில் பெரிதாகப் பார்க்காத ஒரு வழக்கறிஞரின் அன்றாட வாழ்க்கையை இயல்பாக எடுத்துரைத்திருக்கிறார் வசனகர்த்தா பிரதீப் மரியன்.

“சில பேர் ஒரே வெற்றியில் பெரிய ஆளாகிவிடுகிறார்கள். நாம் ஒவ்வொரு வெற்றியையும் வெற்றியாக்க வேண்டும்” என்ற வசனம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

## இயக்கம் மற்றும் திரைக்கதை

இயக்குநர் பாலாஜி செல்வராஜ், நீதியின் மீது வெளிச்சம் பாய்ச்சும் விதமாக இத்தொடரை உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு எபிசோடையும் பெரிய தொய்வின்றி இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

பாலாஜி செல்வராஜ் மற்றும் பிரதீப் மரியன் இணைந்து எழுதிய கதை, திரைக்கதை, வசனங்கள் ஆகியவை தொடரின் பலமாக அமைந்துள்ளன. எடுத்துக்கொண்ட கதைக்களத்தை நேர்மையான கதைசொல்லலுடன் வடிவமைத்திருக்கிறார்கள்.

சக்திவாய்ந்த எதிர்த்தரப்பு, வலுவான ஆதாரங்களின் பற்றாக்குறை, நீதியை நிலைநாட்டப் போராடும் வழக்கறிஞர் என ஆரம்ப அத்தியாயங்களிலேயே கதைக்கான முக்கிய அம்சங்கள் அறிமுகமாகின்றன.

அத்தியாயங்களுக்கு இடையே சுவாரஸ்யமான திருப்பங்களை அமைத்து, அடுத்த எபிசோடைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறார்கள். நீதிமன்ற விசாரணைகளும், கதாபாத்திரங்களின் மோதல்களும் கதையைத் தொடர்ந்து நகர்த்த உதவுகின்றன.

கடைசி எபிசோடில் கதை முடிவை நெருங்கும்போது, முந்தைய சம்பவங்களுக்கான தெளிவு கிடைப்பது சிறப்பு. சுருக்கமான எபிசோடுகள், தெளிவான திரைக்கதை, வலுவான வசனங்கள் ஆகியவை தொடருக்குக் கூடுதல் பலம்.

## கலை இயக்கம்

கலை இயக்குநர் பாவனா கோவர்தன், தொடரின் களத்துக்கு ஏற்ற வகையில் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். பல்வேறு காட்சிகளிலும் தேவையான சூழலை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு கவனிக்கத்தக்கது.

## தொழில்நுட்பக் கலைஞர்கள்

– **Audiography:** Anand Ramachandran
– **Production Executive:** Usilai M. Sivakumar
– **Executive Producers:** R. Bharathidasan (Danny), Jagadeshwari Kanniyappan
– **Lyrics:** Mohan Rajan
– **Co-Director:** Mano Dheeban
– **Stills:** Siddhu, Chandan Ramesh
– **Final Mix Studio:** Le Magic Lantern
– **SFX:** Sujith Bathery
– **Colorist:** John Sriram
– **DI Lab:** Pro Colours
– **VFX:** Vinnoli Ruban
– **Associate Directors:** Gokul S, Hari Raj
– **First Assistant Directors:** Abarajidhaa P, Bharathi Sriman A, Diwahar Manimaran
– **Assistant Directors:** Sneha Mohan, Abhithaa Sree B K, Raman Naidu

இந்த வெற்றித் தொடரை ZEE5 வழங்குகிறது.

**மக்கள் தொடர்பு:** சதீஷ் & சிவா AIM

## இறுதித் தீர்ப்பு

சட்டம், நீதி, அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையிலான மோதல்களை விறுவிறுப்பான நீதிமன்றத் திரில்லராகக் கொடுத்திருக்கிறது ‘சட்டமும் நீதியும் 2’. சரவணன், வரலட்சுமி ஆகியோரின் வலுவான நடிப்பு, தெளிவான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள், சிறப்பான பின்னணி இசை எனப் பல அம்சங்கள் தொடரை ரசிக்க வைக்கின்றன.

**மொத்தத்தில், ‘சட்டமும் நீதியும் 2’ வெற்றிப் பாதையில் பயணிக்கும் ஒரு சிறப்பான நீதிமன்றத் தொடர்!**

**மதிப்பீடு: 4-/5** 🌸