ஜான் டோ – திரைப்பட விமர்சனம்

மதிப்பீடு: 4-/5

கதை – திரைக்கதை

கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதியான குறிஞ்சி மேடுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

துபாயில் 18 ஆண்டுகள் வசித்துவிட்டு, தனது மகள் லக்கி (ஜாரா வீனீத்), மகன் ரிதய் மற்றும் குடும்பத்தினருடன் குறிஞ்சி மேடு மலைப்பகுதியில் குடியேறுகிறார் தர்ஷனா (ஸ்ருஷ்டி). அங்கு திடீரென சிறுவன் ரிதய் காணாமல் போகிறான்.

அவனைத் தேடும் முயற்சியில் போலீஸ் அதிகாரி சந்துரு (அர்ஜுன் தாஸ்), ஏ. ராவ் (சஞ்சனா நடராஜன்) ஆகியோர் விசாரணையில் இறங்குகிறார்கள்.

விசாரணையின்போது, இது ஒரு சாதாரணக் குழந்தை காணாமல் போன வழக்கு அல்ல என்பது தெரிய வருகிறது. அந்தப் பகுதியில் இதற்கு முன்பும் பல குழந்தைகள் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறார்கள். மொத்தம் 17 குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களுக்கும் தற்போதைய வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது.

இதற்குப் பின்னால் தொடர் கொலைகாரன் இருக்கிறானா? காணாமல் போன குழந்தைகளுக்கு என்ன நடந்தது? விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியின் சொந்த வாழ்க்கைக்கும் இந்த மர்மத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நோக்கிப் பயணிப்பதே படத்தின் முக்கியமான திரைக்கதை.

17 குழந்தைகள் காணாமல் போனதன் பின்னணியில் இருக்கும் குற்றவாளி யார்? குற்றத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியின் உளவியல் போராட்டம் என்ன? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இடைவேளையில் எதிர்பாராத திருப்பம். அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியிலும் செம ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.

விறுவிறுப்பாகப் பயணிக்கும் முதல் பாதித் திரைக்கதை, இரண்டாம் பாதியில் பல யூ-டர்ன்களைச் சந்தித்து ராக்கெட் வேகத்தில் பறக்கிறது.

குறிஞ்சி மேடு போலீஸே வலைவீசித் தேடினாலும் சிக்காமல் ஒருவன் கொலைகளை நிகழ்த்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

முடிச்சுகள் அவிழும் இடத்தைத் தவிர்த்துப் பார்த்தால், நிஜமாகவே பார்வையாளர்களைப் பயமுறுத்தி அனுப்புகிறான் இந்த ஜான் டோ!

நடிகர் – நடிகைகள்

அர்ஜுன் தாஸ் – சந்துரு (போலீஸ் அதிகாரி)

மனிதநேயம் கொண்ட போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். போலீஸ் வேடம் அவருக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. அர்ஜுன் தாஸின் குரலும் நடிப்பும் இந்த மாதிரியான சைக்கலாஜிக்கல் திரில்லர் கதைக்கு நன்றாகப் பொருந்துகின்றன.

ஆரம்பக் காட்சிகளில் தனது தந்தையான படவா கோபியின் உளவியல் ரீதியான தொல்லைகளைத் தாங்க முடியாமல் தவிப்பதும், சிறுவயதிலேயே ‘நீ போலீஸ் ஆக முடியாது’ என்று இகழ்ந்து பேசும் தந்தைக்கு முன்னால் வளர்ந்து போலீஸ் அதிகாரியாகி சவால் விடும் காட்சியும் சிறப்பு.

குழந்தைகள் காணாமல் போன பிறகு, படவா கோபியின் வாய்ஸ் ஓவரில் அவரை மட்டும் குற்றம் சாட்டும் காட்சிகளும், கொலையாளியைக் கண்டுபிடித்த பிறகு அவர் எழுப்பும் கேள்விகளும் மனதைத் தொடுகின்றன.

டூயட் பாடல்கள் இல்லாமலேயே கம்பீரமான போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.

சஞ்சனா நடராஜன் – ஏ. ராவ்

துணிச்சல் மிக்க போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மிடுக்கான பேச்சு, அதிரடியான அணுகுமுறை எனக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

‘அடி, உதைதான் குற்றவாளியைப் பேச வைக்கும்’ என்று சொல்லும் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஸ்ருஷ்டி – தர்ஷனா

தாயாக, தனது மகன் ரிதய் காணாமல் போன பிறகு தவிப்பது, மகள் லக்கி தனது பேச்சைக் கேட்காமல் எதிர்வாதம் செய்யும்போது கலங்குவது என உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜாரா வீனீத் – லக்கி

துபாயிலிருந்து வந்த பெண்ணாக ஆரம்பத்தில் திமிர் பிடித்த கதாபாத்திரத்திலும், பின்னர் தம்பிக்கு உதவும் நல்ல அக்காவாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முக்கியமான திருப்பத்திலும் இவரது கதாபாத்திரம் கவனம் பெறுகிறது.

அனுபமா குமார் – லதா

குழந்தைக்காக ஏங்கும் தாயாகக் கண்ணியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படவா கோபி

அர்ஜுன் தாஸின் தந்தையாகக் கண்டிப்பான மனிதராக நடித்திருக்கிறார். இதுபோன்ற தந்தைகளின் அணுகுமுறையால் சிறு குழந்தைகள் மனரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இயக்குநர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

மேலும், நீரவ் சுதர்சன், அர்ச்சனா சந்தோக் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் ஜெயபிரகாஷ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

கதை, திரைக்கதை, இயக்கம் – மதுமிதா

ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற வித்தையை நன்றாகக் கற்றுத் தேர்ந்து வெற்றிகரமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா.

கதை நடைபெறும் இடம், கொலையாளி யார் என்று கணிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் சஸ்பென்ஸ், அர்ஜுன் தாஸின் உளவியல் பின்னணி என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

அவருக்குத் துணையாக நிக்கோலஸ் செவாலியர் திரைக்கதை எழுத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.

இசை – முஜீப் மஜீத்

பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்றவாறு சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார்.

அர்ஜுன் தாஸ் பாடிய பாடலும், அவர் தனது தங்கையுடன் பாடிய பாடலும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசையின் மூலம் பார்வையாளர்களைப் பதற்றமடையச் செய்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – ப்ரீத்தா ஜெயராமன்

அழகான மலைப்பகுதியை நேர்த்தியாகப் படம்பிடித்திருக்கிறார். குறிஞ்சி மேட்டின் இயற்கை அழகையும், கதையின் மர்மத்தன்மையையும் தனது ஒளிப்பதிவில் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்.

படத்தொகுப்பு – விஜய் வெங்கடராமன்

படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதைக்குப் பலம் சேர்க்கும் வகையில் எடிட்டிங் அமைந்திருக்கிறது.

கலை இயக்கம் – அஸ்வினி காலே

சைக்கோ கொலைகாரனின் ‘மேஸ்’ வீடு மற்றும் மார்ச்சுவரி வடிவமைப்பில் மிகுந்த மெனக்கெடலைக் காட்டியிருக்கிறார். கலை இயக்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது.

சண்டைப் பயிற்சி – தினேஷ் சுப்பராயன்

ஆடை வடிவமைப்பு – பிரியா கரன் & பிரியா ஹரி

இறுதியாக…

விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், மிரட்டலான பின்னணி இசை, அர்ஜுன் தாஸின் சிறப்பான நடிப்பு என ஒரு முழுமையான சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் அனுபவத்தைக் கொடுக்கிறது ஜான் டோ.

படம் வெற்றிப் பட்டியலில் இடம்பிடிக்க வாழ்த்துகள்!

மதிப்பீடு: 4-/5

மக்கள் தொடர்பாளர்: யுவராஜ் அவர்கள்.

🙏 கிளாசிக் சினிமா