ஒரு படத்தில் டைட்டில் என்று படத்தில் உழைத்தவர்களின் பெயர்ப் பட்டியலைப் போடுவார்கள். ஒரே படத்தில், டைட்டிலில், நான்கு இடங்களில் பெயர்கள் வரும் அதிசயம், ஆச்சரியம் அப்போதே நிகழ்ந்திருக்கிறது. அந்த சாதனைகளை நிகழ்த்தியவர்… திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ்.
இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. ஒருவகையில், கே.பாக்யராஜுக்கும் இதுவே முதல்படம். ஆமாம்… பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் 16 வயதினிலே.
மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றதுடன், தமிழ் சினிமாவின் தடத்தையும் களத்தையும் மாற்றியது என்றே 16 வயதினிலே படத்தைச் சொல்லலாம்.
இதன் பிறகு பாரதிராஜாவின் இரண்டாவது படமாக வெளியானது கிழக்கே போகும் ரயில். இதுவும் சூப்பர் ஹிட் திரைப்படம்தான். சுதாகரையும் ராதிகாவையும் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. வசூல் சாதனையும் புரிந்தது இந்த ரயில். படமாக்கப்பட்ட விதமும் க்ளைமாக்ஸ் காட்சியும் பலராலும் பேசப்பட்டது. பாரதிராஜாவின் இரண்டாவது படமும் அவரை அடுத்தகட்ட உயரத்துக்கு அழைத்துச் சென்றது.
கிழக்கே போகும் ரயிலின் படத்தில்தான் இப்படியொரு அதிசயமும் ஆச்சரியமும் நிகழ்ந்தது. படத்தில், ஆங்காங்கே சில காட்சிகளில் வருவார் பாக்யராஜ். ஆகவே, நடிகர்களின் பெயர் போடும்போது, கே.பாக்கியராஜ் என்று டைட்டிலில், பத்தோடு பதினொன்றாக இவரின் பெயரும் இடம்பெறும்.
அடுத்து இரண்டாவதாக, பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்ததால், டைரக்ஷன் உதவி கே.பாக்கியராஜ் என்று இவரின் பெயர் இடம்பெற்றது. இந்த உதவி டைரக்டர் என்பதுதான் பாக்யராஜ்க்கான முதல் விசிட்டிங் கார்டு.
மூன்றாவதாக, கிழக்கே போகும் ரயில் படத்துக்கு, கதை வசனம் ஆர்.செல்வராஜ் எழுதியிருப்பார். கூடவே உதவி வசனம் என்று கே.பாக்கியராஜ் என்று டைட்டிலில் பெயர் வரும்.
ஆக, நடிகராகவும் உதவி இயக்குநராகவும் உதவி வசனகர்த்தாவாகவும் மூன்று இடங்களில் டைட்டிலில் பெயர் வந்தாகிவிட்டது. அடுத்து நான்காவதான டைட்டில்தான் சுவாரஸ்ய ஆச்சர்ய அதிசயம்.
இந்தப் படத்தின் பாடல்களை, கண்ணதாசன், முத்துலிங்கம், கங்கைஅமரன் ஆகியோர் எழுதியிருப்பார்கள். இந்த மூவரைத் தவிர, நாலாவதாக இன்னொருவரின் பெயரும் டைட்டிலில் வெளியிடுவார்கள். அந்தப் பெயர்… கே.பாக்கியராஜ். ஆமாம்… கிழக்கே போகும் ரயில் படத்தில், ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார் பாக்யராஜ்.
ஆக, திரையுலகுக்கு வந்து, இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் படத்திலேயே, நடிகர்கள் பெயர், உதவி வசனகர்த்தா, உதவி இயக்கம், பாடலாசிரியர் என நான்கு இடங்களில் ஒருவரின் பெயர் இடம்பெற்றவர் அநேகமாக, இயக்குநர் கே.பாக்யராஜாகத்தான் இருக்கும்.
பாரதிராஜா எனும் இயக்குநரின் படத்தில், பின்னாளில் மிகப்பெரிய இயக்குநரான கே.பாக்யராஜ், ஒரே படத்தின் டைட்டிலில், நான்கு இடங்களில், நான்குவிதமான பணிகளுக்காக டைட்டிலில் பெயர் பெற்றார் எனும் பெருமை, கே.பாக்யராஜுக்கு மட்டுமே உரித்தானது என்கிறார்கள் ரசிகர்கள்!
