ராமம் ராகவம் – விமர்சனம்

ரேட்டிங் 4/5

ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண தந்தையின் கதையைப் பேசியுள்ளது இத்திரைப்படம்.

கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி தசரத ராமன். ஆனால் அவரது மகன் ராகவனோ, பள்ளிப்பருவத்திலேயே தீய பழக்கங்களுக்கு உள்ளாகி, எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாகவும் சூதாடியாகவும் வளருகிறான். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் உறவு என்பது முட்டல்மோதலாகவே உள்ளது. தந்தை, மகனின் மீது அதீத பாசம் வைத்துள்ளார். அதைப் புரிந்து கொள்ளாத மகன், தந்தையை மிகவும் வெறுக்கிறான். ஒரு தந்தையாகத் தனது மகனின் விருப்பம் என்னவென அறிந்து, மகனுக்காக அதைச் செய்யத் துணிகிறார் தசரத ராமன். ராமாயணத்தில், தந்தைக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார் ராமர்; இப்படத்தில், மகனுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராமன்.

சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிரமோதினி பிரமாதமாக நடித்துள்ளார். பெற்ற மகனையும் விட்டுக் கொடுக்க முடியாமல், கணவனின் நியாயத்தையும் புரிந்தவராக, இருவருக்கும் இடையில் அல்லாடும் அம்மா பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். நாயகி மோக்ஷாவிற்குக் கதையிலும் படத்திலும் பெரிய வேலை இல்லாவிட்டாலும், அவர் வருகின்ற காட்சிகளில் அழுத்தமாகத் தனது இருப்பைப் பதிந்துள்ளார்.

அனுமன் பக்தராகவும், பவானி பைனான்ஸ் நடத்துபவராகவும் வருகிறார் சுனில். ஆனால் அவர் மிகக் குறைவான காட்சிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார். சத்யாவும், பாலிரெட்டி பிருத்துவிராஜும் படத்தின் நகைச்சுவைக்கு உதவியுள்ளனர். பாண்டிச்சேரி தேவாவாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். துணை நாயகன் என்றே சொல்லும்படி மிக முக்கியமான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. படத்தில், ஹரிஷ் உத்தமனுக்கு மட்டுமே ஒரு சண்டைக் காட்சி வைக்கப்பட்டுள்ளது. கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு முத்திரை பதித்துள்ளார் ஸ்டன்ட் இயக்குநர் நட்ராஜ். தேவையும் ஆசையும் ஒரு மனிதனை எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதை ஹரிஷ் உத்தமன் மூலமாக அழகாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் தனராஜ்.

ராகவனாக நடித்துள்ள தனராஜ், இப்படத்தை இயக்கியும் உள்ளார். முதற்படம் இது எனச் சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் படத்தை உருவாக்கியுள்ளார். பல படங்களில் நடித்த அனுபவம் அவரது இயக்கத்திற்குப் பெரிதும் கை கொடுத்திருக்கிறது. நடிப்பிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்து, பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளாகிறார். ‘இப்படியொரு மகன் யாருக்கும் வாய்த்து விடக்கூடாது!’ எனப் பதட்டப்பட வைக்கிறார். அந்தப் பதட்டத்தைத் தணியாமல் பார்த்துக் கொண்டுள்ளது அருண் சிலுவேருவின் பின்னணி இசை. ‘குலசாமி போல’ என்ற யுகபாரதியின் பாடலும், க்ளைமேக்ஸில் மனதைக் கனக்கச் செய்ய வைக்கும் முருகன் மந்திரத்தின் வரிகளில் வரும் பாடலும் கதைக்கருவிற்கு உரம் சேர்த்தாக அமைந்துள்ளன. தனது கேமரா கோணங்களின் மூலமாக நடிகர்களின் மனதைத் திரையில் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத்.

இந்தப் படத்தின் அச்சாணியாக உள்ளார் சமுத்திரக்கனி. ‘விதை நல்ல விதை; நிலமும் நல்ல நிலம். ஆனால் எங்கே தவறு நடந்தது? நான் சரியா வளர்க்கலையா?’ என மகனை எண்ணிக் கலங்கிக் கலங்க வைக்கிறார் சமுத்திரக்கனி. மகனுக்காக ஒரு தந்தை எந்த அளவிற்குப் போவார் என்பதை சமுத்திரக்கனி ஏற்றிருக்கும் தசரதராமன் மூலமாக அழுத்தமாகப் பதிந்துள்ளார் இயக்குநர் தனராஜ்.

தமிழில் வசனம் எழுதியுள்ள மாலி கவனிக்கவைக்கிறார். சமுத்திரக்கனி பேசுகிற வசனங்கள் நம் மனதில் பதிகிறது.

‘விமானம்’ படத்தின் இயக்குநர் சிவபிரசாத் யானாலாவின் கதைக்கு உயிர் கொடுத்து அசத்தியுள்ளர் தனராஜ் கொரனானி. படம் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், ஒரு கணமேனும் அவர்களது தந்தையை நிச்சயம் நினைத்துப் பார்ப்பார்கள். அதுதான் இந்தப் படத்தின் வெற்றி.