மண்ணு மாமன்னன் ஆன கதை விமர்சனம் பார்க்கலாம் வாங்க

30 வருடத்திற்கு முன் வந்த தேவர்மகன் படத்தைப் பற்றி, இயக்குனர் இன்று பேச வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி கேட்டவர்களுக்கு ..
இன்றும் பேசப்பட வேண்டிய, தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் சாதி இருக்கிறது என்பதை பதிலடியாக உரக்கவே சொல்லியிருக்கிறார் இயக்குனர் திரு .#மாரிசெல்வராஜ் அவர்கள்

பசியே இல்லை என்றாலும் .. கடித்துக் குதறி உயிர் பறிக்கும் நாயின் மனநிலையில் ஆதிக்க சாதியினரும்,
என்ன கூக்குரலிட்டு கதறினாலும்..
எவரும் உதவ முன்வராத கைவிடப்பட்ட பன்றியின் நிர்கதி சூழலில் ,
ஒடுக்கப்பட்ட சாதியினரும் இருக்கிறார்கள் என்பதை அற்புதமாக , மனம் பதைபதைக்க கூறியிருக்கிறார் இயக்குனர்.

எந்த ஒரு சாதியையும் இகழ்ந்து பேசவில்லை .
எந்த ஒரு சாதியையும் குறி வைத்து விமர்சிக்கவில்லை.
ஆனால், ஒட்டு மொத்தமாக ஆதிக்க சாதி மனநிலையில் உள்ளவர்கள் காலம் காலமாக தனக்குக் கீழ் உள்ளவர்களை எவ்வாறு இழிநிலையாக கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக தோலுரித்தே காட்டியிருக்கிறார்.

‘எனது நாய் , பந்தயத்தில் தோற்பது பற்றி எனக்குக் கவலையில்லை .
ஆனால், எந்த சாதிக்காரன் நாயிடம் தோற்கிறது என்பதே முக்கியம்’ .
‘உனக்கு மேல் உள்ள சாதிக்காரன் கிட்டயோ,
உனக்கு சமமா உள்ள சாதிக்காரன் கிட்டயோ கூட பணிந்து போ.
ஆனால் , உனக்கு கீழ் உள்ள சாதிக்காரன் கிட்ட சமரசமா போறத விட ,
செத்துப் போறது மேல்’ .
‘உன்ன உள்ள விட்டு , நிக்க வச்சு பேசுனது என்னோட அடையாளம் .
இப்போ உன் மகன உக்கார சொல்றது என்னோட அரசியல்’ .

என்பது போன்ற துல்லியமான வசனங்கள் வரும் போதெல்லாம் தான் ஒரு எழுத்தாளர் என்பதை இயக்குனர் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
#Hatsoffமாரிசெல்வராஜ்

சமீபத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த போது ..
எவரும் பெரிதாய் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை . கிளர்ந்து எழவில்லை .
காரணம் , அதை அருந்தும் மனிதர்கள் குறித்த நம் அனைவரின் மனநிலையே .
ஆனால் , அந்த வலியை ..
பன்றி மேய்ப்பவன் பிள்ளைகள் கிணற்றில் குளிக்கிறார்கள் என்பதற்காக, அனைவரையும் கல்லெறிந்தே கொல்லும் அந்த சாதிக் கொடூரத்தின் வழியே நமக்கு கடத்தி பதறவும் வைத்திருக்கிறார்.

ஓட்டு பிச்சைக்காக அரசியல்வாதிகள் எவ்வாறெல்லாம் இயங்குகிறார்கள் ; நடிக்கிறார்கள் ; எளிய மக்களை காவு வாங்குகிறார்கள் என்பதற்கு சாட்சியாக ,
கிணற்றின் சுவற்றை இடித்து விட்டு ..
“சுவர் விழுந்து சிறுவர்கள் மரணம்” என்று செய்தியை பரப்புவதன் மூலம் நம்மை பதறச் செய்திருக்கிறார்.

” இன்னைக்கு நான் இருக்குற இந்த நிலைமைக்கு .. என் உழைப்பும்,திறமையும் தான் காரணம்னு உணராம ,
அவனுக போட்ட பிச்சைன்னு நம்புனேன் பாரு .
அதுதான் தம்பி நான் பண்ணின தப்பு ” ன்னு உணர்ச்சி பிழம்பாக பேசும் போது நடிகர் வடிவேலு அவர்கள் மாமன்னனாகவே வாழ்ந்திருக்கிறார்.

அதிவீரன் என்கிற அந்த கதாபாத்திரத்திற்கு..
தன்னால் என்ன பலம் சேர்க்க முடியுமோ , அதை போதுமான அளவிற்கு செய்து ..
தனது திரைவாழ்வில் சிறந்ததொரு நடிப்பையும் வழங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

சாதி வெறி பிடித்த ஒருவன் எவ்வாறு இருப்பான் என்பதற்கான மொத்த உருவமாக , வெறிபிடித்த மிருகமாக ..
ரத்னவேலுவாகவே மாறி, நம்மை மிரள வைத்திருக்கிறார் நடிப்பு ராட்சசன் பகத் ஃபாசில்

காட்சியின் அடுத்த நகர்வுக்குத் தேவையான இசையை பரபரப்புடனும், புதுமையாகவும் தந்து ‘இசைப்புயல்’ A R ரஹ்மான் நம் மனதை மையம் கொள்கிறார்.

சாதியின் பெயர் சொல்லி ஒருவனை பொதுவெளியில் அவமானப் படுத்துவதும் ,
அவனை ஊருக்குள்ளே நுழைய விடாமல் இருக்க சாதிச் சங்கங்கள் எவ்வாறு பயன்படுகின்றன என்பதையும் ,
ஒடுக்கப்பட்ட மக்களில் சிலர் எளிதில் விலை போய் ..
தனது இனமக்களுக்கே எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்‌ செய்கிறார்கள் என்பதையும் வெகு சிறப்பாக உரைத்திருக்கிறார் இயக்குனர்.

காலம் காலமாய் நம் இரத்தத்திலும் , மனதிலும் ஊறிப்போன சாதிய வெறியை அகற்றி ,
பிறப்பால் அனைவரும் சமமே என்கிற சமத்துவத்தை ..
இன்றைய இளைய தலைமுறையினரால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதை அழுத்தந் திருத்தமாக சொல்லி இருப்பதில் மாரிசெல்வராஜின் தெளிந்த அறிவு புலப்படுகிறது.

நீ மாமன்னன் என்று பெயர் வைத்தால் எங்களுக்கு என்ன .?!
நாங்கள் உன்னை ‘மண்ணு’ என்று தான் அழைப்போம் என்கிற ஆதிக்கசாதியின் மனநிலையை தகர்த்து ..
அனைவராலும் எழுந்து நின்று வணங்கப்படக் கூடிய
“பேரவைத் தலைவராக” வடிவேலு உயரம் தொடுகையில் ..
தியேட்டரில் படம் பார்த்த பலரும் ஆரவாரம் செய்து , எழுந்து நின்று கை தட்டியது
இன்னொருவருக்கும் சேர்த்து தான் ..

ஆம், இம்மி பிசகினாலும் சாதிக் கலவரமும் , பிரச்சனைகளும் கொழுந்து விடும் தென்மாநிலங்களில் ..
மிகவும் நேர்த்தியாக இந்த விஷயத்தைக் கையாண்டு ,
அவரவர் மனதிற்குள்ளேயே கூனிக் குறுகும் உணர்வை உண்டாக்கி இருக்கிற திரு.மாரிசெல்வராஜ் அவர்களுக்கும் சேர்த்து தான் .!

அம்பேத்கர்,பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கிய தடத்தில் ..
நவீன கால தேவைக்கேற்ப ,
பா.ரஞ்சித், மாரிசெல்வராஜ் , வெற்றிமாறன் என அடுத்த தலைமுறை வருவதும் தேவையாகத்தான் இருக்கிறது .!!
100ஆண்டு கடந்த தமிழ் சினிமாவில் முதன்முறையாக கதாநாயகன் கையில் தவழ்கிறது ‘பன்றிக்குட்டி’.
அதற்காகவே இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களை ஆரத்தழுவி பாராட்டி வாழ்த்துகிறேன்.
தொடர் வெற்றிகளை பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தமைக்கு ஒரு பூங்கொத்து!
மூன்று படைப்புகளும் தரத்தில் இமயமலைச் சிகரங்களே!!
அதற்காக பல கைதட்டல்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பு இப்படத்தில் எவரெஸ்ட் சிகரமாக திகழ்வது மிகுந்த மகிழ்ச்சியையும், மனவருத்ததையும்அளித்தது.
அவருக்கு விடை கொடுக்க முடியாது;கூடாது.
’நெஞ்சுக்கு நீதி’, ‘மாமன்னன்’ போன்ற படங்களில் அவரது பங்களிப்பு தொடர வேண்டும்.

வடிவேலு என்ற மகாகலைஞனுக்கு புதிய சிவப்புக்கம்பளம் விரித்து இருக்கிறது ‘மாமன்னன்’.
அதில் அவர் தொடர்ந்து நடக்க வேண்டும்.

சாதி வெறியன் யுவராஜ் கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு ஆளுயர மாலை.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மாமன்னனின் படைத்தளளபதிகளாக பணி புரிந்துள்ளார்கள்.
அவர்கள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துக்கள்