நீண்ட காலத்திற்குப் பிறகு மணிரத்னம் + கமல்ஹாசன் கூட்டணி

நீண்ட காலத்திற்குப் பிறகு மணிரத்னம் + கமல்ஹாசன் கூட்டணி அமைகிறது என்கிற செய்தியே பயங்கரமான ஆர்வத்தை ஊட்டக்கூடிய அம்சம். அந்த எதிர்பார்ப்பை டீஸர் அட்டகாசமாக நிறைவேற்றியிருக்கிறது. படத்தைப் பார்க்கும் ஆவல் உண்டாகியிருக்கிறது. இந்தியன் 2 டீஸர் பார்த்து அவிந்து போன கண்களுக்கு இந்த டீஸர் உற்சாகத்தை அளிக்கிறது.

சினிமாவின் தொழில்நுட்பத்தை கச்சிதமாகவும் பிரமிப்பூட்டும் வகையிலும் பயன்படுத்துவதில் மணிரத்னம் எப்போதும் கில்லி. முன்னோடியும் கூட. இதில் அவர் அடுத்தக் கட்ட பாய்ச்சலை நோக்கி நகர்ந்திருப்பதைப் போல் தொிகிறது. இப்படியொரு ஆக்ஷன் காட்சி மணியின் படத்தில் புதிது. டீஸரின் திரைமொழியே அத்தனை புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

என்னதான் தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தினாலும் நேட்டிவிட்டியில் சற்று கந்தரகோளம் செய்வது மணியின் வழக்கம். இதிலும் அப்படியே சில சந்தேகங்கள் வந்தாலும் ஆரம்பத்திலேயே எதையும் சொல்லக்கூடாது என்று தோன்றுகிறது.

இமேஜில் தெரியும் வசனம் முக்கிய திறவுகோலாக என்று நினைக்கிறேன். அதை வைத்து ஒட்டுமொத்த டீஸரையும் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு அத்தனை நேர்த்தியாக இருக்கிறது. அன்பறிவ் கூட்டணி இதிலும் மிரட்டியிருக்கிறார்கள். ரஹ்மானின் இசை அட்டகாசம். கிளிஷேவாக இருந்தாலும் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

கதாபாத்திரப் பெயரில் ‘நாயக்கன்’ என்று வந்தாலும் டைட்டிலை ‘தக் லைஃப்’ என்று வைத்தது சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக இருக்குமோ? கமல் சூடு பட்ட பூனையாயிற்றே?!

எத்தனை கிண்டலடித்தாலும் முன்கூட்டிய விமர்சனங்களைக் கொட்டினாலும் டீஸர் அபாரம் என்பதை மறுக்க முடியாது. ஏமாற்றவில்லை. எதிர்பார்ப்பு கன்னாபின்னாவென்று இருக்கிறது. விவரங்கள் மெல்ல அவிழட்டும். பார்ப்போம்.

வயதான ஹாலிவுட் இயக்குநர்கள் செயலாக இருந்தால் பாராட்டுகிறோம். அப்படியே நம்மூர் கலைஞர்களையும் கண்டுகொள்ளலாம். இத்தனை தூரம் ஓடியதிற்குப் பிறகும் கூட மணியும் கமலும் பார்வையாளர்களின் ஆர்வத்தை இன்னமும் கிளப்பும் வகையில் செயல்படுகிறார்கள் என்றால் நிச்சயம் அதை பாராட்டலாம்.