மீண்டும் வாருங்கள், கேப்டன் மறைந்தும் நம் மனதில் இருந்து மறையாத கேப்டன்

மீண்டும் வாருங்கள், கேப்டன் மறைந்தும் நம் மனதில் இருந்து மறையாத கேப்டன் விஷயத்தில் எனக்கும் அவர் பற்றி சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது.

தினத்தந்தியின் சினிமா நிரூபராக இருந்ததால் எப்போதும் அவர் இதயம் தொடங்கி வீட்டு வாசல் வரை திறந்தே இருந்தது. அன்பின் ஆளுமை அவர்.

அது 2000-ம் ஆண்டு. நவம்பர் 27-ந்தேதி. விஜஜி என்ற நாயகி நட்சத்திரம் உதர்ந்த நாள். சொந்தப் பிரச்சினைக்காக தூக்கில் தொங்கி தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டது, அந்த இளம் நட்சத்திரம்.

செய்திக்காக விஜியின் இல்லம் வி்ரைந்தால் அங்கே எனக்கும் முன்னதாக கேப்டன் இருந்தார். கூடியிருந்த நிரூபர்களிடம் நட்பு முறையில் விஜியின் குணாதிசயங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

கூடவே ரசிகர்கள் கூட்டம் வேறு. அவர்களை அவர் சமாளித்த விதம் தனி. செய்தியாளர்களிடம், ‘செத்துப் போனது எங்க வீட்டு பொண்ணு. அதனால் பெத்தவங்க மனசு காயப்படாம செய்தி போடுங்க’ என்கிறார்.

இத்தனையும் அவர ஒருவரே செய்கிறார்.

இன்னும் தூக்கில் தொங்கிய விஜியின் அறை திறக்கப்படாத நிலை. உயர்போலீஸ் அதிகாரி ஒருவரின் வருகைக்காக காத்திருந்தார்கள்.

அரைமணி நேரத்தில்அதிகாரி வந்த பிறகு கேப்டனை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் புறப்பட்டார். கேப்டனோ என் கையை இறுகப் பற்றிக் கொண்டு என்னையும் உடன் அழைத்துப்போகிறார். ‘தந்தி நிரூபர்’ என்று கேட்காத உயர்அதிகாரிக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அதன்பிறகு அந்த அறை திறக்கப்பட்டது. அறைக்குள் நாங்கள் மூவரும். உயிரற்ற உடலாக இதோ அருகில் நிற்கும் கேப்டனுடன் டூயட் பாடிய நடிகை. மெலிந்து நலிந்த தோற்றத்தில் விஜியை அந்த நிலையில் பார்க்கவே மனது பதறியது. மூவரும் சேர்ந்தே பாடியை இறக்கினோம். அப்போது ‘ஓ’ என்ற அலறலுடன் உள்ளே ஓடி வந்தார் விஜியின் தந்தை. ‘மகளே’ என்ற அவர் ஓலம் நெஞ்சை உருக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

அடுத்த கணம் அவரை கட்டிப் பிடித்தக் கொண்டார் கேப்டன். ‘அப்பா…நான் இருக்கேம்ப்பா உங்களுக்க’…என்று அவரை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொள்கிறார். அப்போது அவர் கண்களிலும் நீர்.

அவரை ஆசுவாசப்படுத்தி, என்ன நடந்தது என்பதை அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேச வைக்கிறார். அப்போது கூட அவரை பிடித்த பிடியை விடவில்லை.

செய்தி சேகரித்து கிளம்ப வேண்டிய நிலையில் விஜியின் உடல் உடற்கூராய்வுக்கு வேனில் பயணப்படுகிறது. கேப்டனை பார்க்கிறேன். ‘பார்த்து எழுதுங்க. தந்தியில் சரியாத்தான்போடுவீங்க ’என்று அவரே சொல்லி விடை கொடுக்கிறார். அப்போதும் அவர் பிடிக்குள் விஜியின் அப்பா.

ஒரு ஹீரோவை அன்பு செய்யவென்றே அனுப்பப்பட்ட இறை தூதனாக நான் உணர்ந்த தருணம் அது.

23 வருடம் கழித்து அந்த அன்பு இன்று இறைவன் சன்னதிக்கு போய் விட்டது. அவரால் அன்பு விதைக்கப் பட்டவர்கள் மட்டும் அந்த கருணையை , கனிவை
மற்றவர்களிடம் விதைத்ததா,ல் கேப்டன் என்ற அந்த நாலெழுத்து நாலு திசையிலும் அவர் பேரை சொல்லிக்கொண்டிருக்கும்.. அப்படிப்பட்டவர்கள் மூலம் மீண்டும் உங்களை அனுதினமும் பார்க்கப் போகிறோம்.கேப்டன்.